

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயத்துக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.
மேலும், காஷ்மீர் வர்த்தகர் ஜாகூர் அகமது ஷா வடாலி, பிரிவினைவாதத் தலைவர் அல்தாப் அகமது ஷா, ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகர் கிஷோர் கபூர் ஆகியோருக்கு எதிராகவும் ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரவீண் சிங் பிறப்பித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டவிரோத செயல்கள், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்குதல், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து இந்த பிடிவாரண்ட்டை நீதிபதி பிறப்பித்தார்.
இந்தவழக்குத் தொடர்பாக வடாலியின் நிறுவனமான டிரிஸன் பார்ம்ஸ் அன்ட் கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனமும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதால், அந்த நிறுவனத்தின் பிரிதிநிதிகளும் விசாரணைக்கு வரக்கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) ஹபீஸ் சயத், ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சலாலுதீன், வடாலி, பிரிவினைவாதத் தலைவர் சயத் அலி ஷா கிலானியின் மருமகன் அல்தாப் ஷா எனும் அல்தாப் பன்டூஸ், பஷிர் அகமது பாட், ஜாவித் அகமது பாட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு வழக்குத் தொடர்ந்தது. அமலாக்கப்பிரிவு விசாரணையில், ஜம்மு காஷ்மீரில் அமைதியற்ற சூழலை, குழப்பத்தை, தாக்குதல்களை நடத்த ஹபீஸ் சயத், சலாலுதீன் ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர். அந்த பணத்தை ஹவாலா ஏஜென்ட்கள் மூலம் வடாலி பெற்று பிரிவினைவாத தலைவர்களுக்கு சப்ளை செய்துள்ளார்.
பிரிவினைவாத தலைவர்கள், மற்றும் தனிநபர்கள் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு போலீஸார் மீது கல் எறிதலில் ஈடுபடுதல், தாக்குதலில் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என குற்றப்பத்திரிகையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.