Last Updated : 07 Feb, 2021 03:13 AM

 

Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

ட்விட்டர் போராட்டத்தின் பின்னணியை அம்பலமாக்கும் ‘டூல்கிட்’

ரிஹானா, கிரேட்டா

விவசாயிகள் போராட்டத்தில் இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்து, பேசு பொருளானது. பிரபல பாப் பாடகி ரிஹானா மற்றும் பருவநிலை இளம் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் ஆகிய இருவரும் போராட்டத்துக்கு ட்விட்டரில் தெரிவித்த ஆதரவே இதற்கு காரணம்.

ரிஹானா வெளியிட்ட குறும்பதிவில் அதிகவிவரங்களோ, விளக்கமோ இல்லை. விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திப்படத்தை பகிர்ந்து, ‘இது பற்றி ஏன் பேசாமல் இருக்கிறோம்’ என்று அவர் தெரிவித்திருந்தார். போராட்டம் தொடர்பான ஹாஷ்டேகையும் இணைத்திருந்தார். ரிஹானாவை தொடர்ந்து பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவிக்க, அடுத்த சில மணி நேரங்களில் இந்த ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆனது.

பாடகி ரிஹானாவும், கிரேட்டாவும் ஆதரவு தெரிவித்த பின்னணிதான் அந்த திருப்பம். கிரேட்டா ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருந்த போராட்டம் தொடர்பான ‘டூல்கிட்’டே இந்த பின்னணியின் மையமாக அமைந்துள்ளது.

டூல்கிட் என்ன?

பொதுவாக டூல்கிட் என்பது குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக வழிகாட்டும் ஆவணமாக கருதப்படுகிறது. தகவல்கள் அடங்கிய காகித கோப்பாக அல்லது டிஜிட்டல் கோப்பாக டூல்கிட் அமையலாம். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கிரேட்டா வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், போராட்டம் தொடர்பாக உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகை பகிர்ந்து கொண்டதோடு, அதற்கான டூல்கிட்டையும் இணைத்திருந்தார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விருப்பம் கொண்டவர்களுக்கு வழிகாட்டும் வகையில் அந்த டூல்கிட்டில் தகவல்கள் இருந்தன.

ஆனால், முதலில் இணைத்திருந்த டூல்கிட்டை கிரேட்டா அதன் பின் நீக்கி விட்டு, புதிதாக டூல்கிட் ஒன்றை பகிர்ந்து கொண்டார். புதுப்பிக்கப்பட்ட டூல்கிட் இது என கிரேட்டா கூறினாலும், முதலில் பகிரப்பட்ட டூல்கிட்டில் இடம்பெற்றிருந்த தகவல்கள், ட்விட்டர் ஆதரவு போராட்டம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதை அம்பலப்படுத்தியது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ட்விட்டர் மூலம் திரட்டப்பட்ட ஆதரவின் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், கிரேட்டா முதலில் பகிர்ந்த டூல்கிட்டில் தகவல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான வழிகள் குறிப்பிடப்பட்டிருந்த இந்த டூல்கிட்டில், குடியரசு தினத்துக்கு முன்பு அல்லது பின்பு, ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் டிவீட்ஸ்டிராமை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளின் பட்டியலுடன், ட்விட்டரில் ஆதரவு தெரிவிக்க உள்ள பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதில் பாடகி ரிஹானா, தன்பர்க் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. பாடகி ரிஹானா பகிர்ந்து கொண்ட ட்விட்டர் செய்தி கூட இந்த ஆவணத்தில் இருந்திருக்கிறது. ‘குளோபல் டே ஆப் ஆக் ஷன்’ எனும் பெயரில் இந்த பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது. பிஜேஎப் இணையத்தில், இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு திரட்டும் விண்ணப்பப் படிவம் பல மாதங்களாக இருந்து வந்துள்ளது. இந்தியாவின் நற்பெயரை குலைக்க திட்டமிட்டு இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த பிஜேஎப் எனப்படும் ‘பொயட்டிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன்’ எனும் அமைப்பு இந்த டூல்கிட்டின் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. கனடாவைச் சேர்ந்தஅரசியல் பிரமுகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உதவியுடன் இந்த அமைப்பு விவசாயிகள் போராட்டத்தை சர்வதேச அளவில் பிரச்சினையாக்க திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. மக்கள் தொடர்பு நிறுவனமான ஸ்கைராக்கெட், உலக சீக்கிய அமைப்பின் இயக்குநர் அனிதா லால், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜகமீத் சிங் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக டெல்லி காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

2.5 மில்லியன் டாலர்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட் வெளியிட பாடகி ரிஹானாவுக்கு ஸ்கைராக்கெட் நிறுவனம் 2.5 மில்லியன் டாலர் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ரிஹானா ஏன் திடீரென ட்விட்டரில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்விக்கு இதுதான் காரணம். ட்விட்டரில் 100 மில்லியனுக்கு மேல் பின் தொடர்பாளர்களை பெற்றிருப்பதால் ரிஹானாவின் ஆதரவு பெறப்பட்டதாக தெரிகிறது.

தீவிரவாத பின்னணி

இந்த பிரச்சாரத்தை திரைமறைவில் இருந்து இயக்கிய பிஜேஎப் அமைப்பின் இணை நிறுவனர் மோ தலிவால், கனடாவில் வசிக்கிறார். இவர் காலிஸ்தான் தீவிரவாத இயக்க ஆதரவாளர். வேளாண் சட்டத்தை இந்திய அரசு திரும்ப பெற்றாலும் இந்த போராட்டம் முடிவடையாது என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் பேசுவது போன்ற வீடியோ குறித்து காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சர்ச்சையின் மையமாக அமைந்துள்ள பிஜேஎப் அமைப்பு, ட்விட்டரில் இந்த போராட்டம் தொடர்பாக தீவிரமாக செயல்பட்டு வந்திருக்கிறது. ’ஆஸ்க் இந்தியா ஒய்’ (AskIndiaWhy”) எனும் ஹாஷ்டேகுடன் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கருத்துகள் வெளியிடப்பட்டு வந்துள்ளது. மேலும், இதே பெயரில் தனியே ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் மற்றும் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் கவனம் தேவை என இந்த இணையதளம் குறிப்பிடுகிறது.

திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்பதை உணர்த்தும் இந்த டூல்கிட் பின்னணி குறித்த தகவல்களை கூகுள் உள்ளிட்ட இணைய நிறுவனங்களிடம் இருந்தும் காவல் துறை கோரியுள்ளது. இணைய யுகத்தில் சமூக ஊடகம் என்பது தகவல் பகிர்வுக்கான முக்கிய வழியாக உருவாகி உள்ளது. இந்நிலையில், ஹாஷ்டேக் மூலம் திட்டமிட்டு சமூக ஊடக பிராச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்பது சாமானியர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். சமூக ஊடகங்களில் கருத்துச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதோடு, அதன் பின்னே நடைபெறும் விஷயங்கள் குறித்த விழிப்புணர்வும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x