Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

ரூ.3,000 கோடி கடனை அவசரமாக இந்தியாவுக்கு செலுத்தியது இலங்கை: சீனாவின் தலையீடு காரணமா?

கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தில் இருந்து விலகிய இலங்கை அரசு, தற்போது இந்தியாவிடம் வாங்கிய 400 மில்லியன் டாலர் கடனை (சுமார் ரூ.3,000 கோடி) முன்கூட்டியே திருப்பி செலுத்தி உள்ளது. இதன் பின்னணியில் சீனா இருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை தலைநகர் கொழும்புதுறைமுகத்தில், ‘கிழக்கு கன்டெய்னர் முனையம்’ அமைக்க இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் திடீரென இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரத்துசெய்தது. கொழும்பு துறைமுகத்தில் உள்ளபல தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதன் பின்னணியில் சீனா இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தைஅடுத்துள்ள ஒரு பகுதியில் ஒரு சர்வதேச கன்டெய்னர் முனையத்தை சீன நிறுவனம்நடத்தி வருகிறது. அதற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக இந்தியா, ஜப்பானுடனான ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவிடம் வாங்கிய 400 மில்லியன் டாலர் கடனை (ரூ.3,000 கோடி), இலங்கை மத்திய வங்கி திருப்பி செலுத்தி உள்ளது. இதுகுறித்து மத்திய வங்கி கூறும்போது, ‘‘கடனை திருப்பி செலுத்துவது வழக்கமான நடவடிக்கைதான். இதற்கும் கொழும்பு துறைமுக திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும் தொடர்பு இல்லை’’ என்று விளக்கம் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க, இந்தியாவிடம் இலங்கை அரசு 400 மில்லியன் டாலர் கடன் பெற்றது. இந்தப் பணம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணத்தை திருப்பி செலுத்த 2022 நவம்பர் மாதம் வரை கால அவகாசம் உள்ளது. ஆனால், முன்கூட்டியே கடனை இலங்கை அரசு திருப்பி செலுத்தி உள்ளது. இதை இந்திய அரசும் உறுதி செய்துள்ளது.

ஆனால், இந்தியாவின் நெருக்குதல் காரணமாகவே, இலங்கை அரசு வாங்கிய கடனை அவசரமாக திருப்பி செலுத்தி உள்ளதுஎன்று ஊடகங்கள் பொய் தகவல்களைப் பரப்பி வருகின்றன. இதை இலங்கை மத்திய வங்கி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ‘‘இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு அந்த நெருக்கடியும் தரப்படவில்லை’’ என்று விளக்கம் அளித்துள்ளது.

கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து விலகியது, கடனைஇலங்கை அரசு திருப்பி செலுத்தியது போன்ற நடவடிக்கைகளில் சீனாவின் தலையீடு உள்ளது. இதனால், இலங்கை - இந்திய உறவின் சிக்கல் அதிகரிக்கும் என்று இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x