

உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பஞ்சாயத்துத் துறை அமைச்சர் வீட்டிலேயே இருக்க வேண்டும் என ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ்குமார் நேற்று உத்தரவு பிறப் பித்தார்.
ஆந்திர மாநிலத்தில் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பல இடங்களில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போட்டியின்றி தேர்வாகி வருகின்றனர். எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஆளும் கட்சியினர் மிரட்டிமனுவை வாபஸ் பெறச்செய்வதாக தேர்தல் ஆணையரிடம் பலர் புகார் அளித்தனர். இதனால் சித்தூர், குண்டூர் மாவட்டங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம்என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ்குமார் உத்தர விட்டார்.
எச்சரிக்கை
இதுதொடர்பாக ஆந்திர பஞ்சாயத் துத் துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி நேற்று முன் தினம் கூறும்போது, “தேர்தல் ஆணை யரின் மிரட்டலுக்கு யாரும் பயப்பட மாட்டோம். அவரின் பேச்சை அரசு அதிகாரிகளோ அல்லது அரசு ஊழி யர்களோ கேட்கத் தேவையில்லை. அவரின் பேச்சை கேட்டு பணி செய்யும் அரசு ஊழியர்கள் தேர்தலுக்கு பிறகு துறை ரீதியாக தண்டிக்கப்படு வார்கள்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அமைச்சரின் பேச்சு குறித்து ஆளுநருக்கு தேர்தல் ஆணையர் புகார் கடிதம் எழுதினார். மேலும் மாநில காவல்துறை இயக்கு நருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், “அமைச்சர் ராமசந்திரா ரெட்டியின் பேச்சால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை, அதாவது வரும் 21-ம் தேதி வரை அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனால் ஆந்திரஅரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையரின் உத்தரவை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி கூறியுள் ளார்.