

2018-19-ம் ஆண்டில் நாட்டில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் மாணவிகள் இடைநிற்றல் சராசரி 17.3 சதவீதமாக இருந்தது. கர்நாடகா, அசாம், பிஹார், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா மாநிலங்களில் இருந்து மாணவிகள் அதி்கமாக படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினர் என மத்திய மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
2018-19ம் ஆண்டில் நாட்டில் மாணவிகள் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் தேசிய சராசரி 17.3 சதவீதமாக இருந்தது. தொடக்கக் கல்வி அளவில் 4.74 சதவீதமாக இருந்தது. இதில் கர்நாடகா, அசாம், பிஹார், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா மாநிலங்களில் இருந்து மாணவிகள் உயர்நிலைக் கல்வியை அதி்கமாக பாதியிலேயே நிறுத்தினர்.
2017-18ம் ஆண்டில் உயர்நிலைப்படிப்பை கைவிட்டவர்கள் 18.39 சதவீதமாகவும், தொடக்கக் கல்வியில் 4.1 சதவீதமாகவும் இருந்தது. 2016-17ம் ஆண்டில் உயல்நிலை பள்ளிக் கல்வி அளவில் பாதியிலேயே படிப்பை 19.81சதவீதம் நிறுத்தினர், தொடக்கக் கல்வி அளவில் 6.34 சதவீதம் அளவில் நிறுத்தினர்.
2015-16ம் ஆண்டில் உயர்நிலை அளவில் 16.88 சதவீதமாகவும், தொடக்கக் கல்வி அளவில் 4.09 சதவீதமாகவும் இருந்தது. 2014-15ம் ஆண்டில் உயர்நிலை அளவில் 17.79 சதவீதமாகவும், தொடக்க நிலை கல்வி அளவில் 4.3 சதவீதமாகவும் இருந்தது.
2020ம் ஆண்டில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் 111 புகார்கள் வந்துள்ளன.
இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.