

தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த 2,360 அரசியல் கட்சிகளில் 97.50 சதவீத அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாகும். கடந்த 10ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் என மொத்தம் 1,112 கட்சிகள் கடந்த 2010ம் ஆண்டு நிலவரப்படி பதிவு செய்யப்பட்டு இருந்தன. இது கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2019-ம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
2019-ம் ஆண்டு நிலவரப்படி 2,301 கட்சிகளாக அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த 2013 முதல் 2014ம் ஆண்டுக்கு இடையே கட்சிகள் புதிதாகப் பதிவு செய்த எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கு இடையே 9.8 சதவீதம் புதிய கட்சிகள் பதிவு அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இதுவரை 2ஆயிரத்து 360 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இதில் 97.50 சதவீதம் அதாவது, 2ஆயிரத்து 301 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாதவையாகும்.
அதுமட்டுமல்லாமல் 2018-19-ம் ஆண்டில் 2,301 பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் 78 கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. 2017-18ம் ஆண்டில், 82 அரசியல் கட்சிகள் குறித்த நன்கொடை விவரங்கள் மட்டுமே அந்தந்த மாநில தேர்தல் ஆணைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018-19ம் ஆண்டில் 6,860 நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.65.45 கோடியும், 2017-18ம் ஆண்டில் 6,138 பேரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.24.6 கோடியும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அப்னா தேஷ் கட்சி மட்டும் 2017 முதல் 2019ம் ஆண்டுகளில் ரூ.63.65 கோடி நன்கொடை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2017-18-ம் ஆண்டில் 39 அரசியல்க ட்சிகள் மட்டுமே, தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த பங்களிப்பைத் தெரிவித்துள்ளஅன. 2018-19-ம் ஆண்டில் 38 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன. ஒருநாள் தாமதம் முதல் 514 நாட்கள் தாமதாக அரசியல் கட்சிகள் தங்கள் நன்கொடை விவரங்களைத் தாக்கல் செய்துள்ளன.
மாநிலவாரியாகப் பார்த்தால், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 653 அரசியல் கட்சிகள்(28.38%) உள்ளன, அடுத்ததாக டெல்லியில் 291 கட்சிகள்(12.65%), தமிழகத்தில் 184 கட்சிகள்(8%) உள்ளன.
2018-19ம் ஆண்டில் பிஹாரில் மொத்தம் 132 கட்சிகளில் 21 கட்சிகள் மட்டுமே நன்கொடை விவரங்களைத் தாக்கல் செய்துள்ளன. உ.பியில் 653 கட்சிகளில் 20 கட்சிகள் மட்டுமே நன்கொடை விவரங்களை அளித்துள்ளன. டெல்லியில் 18 கட்சிகளும் அளித்துள்ளன.
மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா,இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 25 மாநிலங்களில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளிடம் இருந்து 2018-19ம் ஆண்டுக்கான நன்கொடை விவரங்கள் இல்லை. 2017-18ம் ஆண்டுக்கான நன்கொடை விவரங்கள் 21 மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படதாக கட்சிகளிடம் இருந்து வரவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.