

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் இந்தியாவின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். இந்த ஆண்டு தீபாவளியின்போது அவர் பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதனால் நிருபர்களை சந்திக்கவில்லை.
இதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு தீபாவளி விருந்து அளித்தார். இதில் பத்திரிகை, மின்னணு ஊடகங்களைச் சேர்ந்த சுமார் 900 செய்தியாளர்கள் பங்கேற்றனர். பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
தீபாவளி பண்டிகை காலத்தில் லண்டனில் இருந்ததால் நிருபர் களை சந்திக்க முடியவில்லை. அதனால் இப்போது சந்திக்கி றேன். இல்லையெனில் நாம் (நிருபர்கள்) மீண்டும் சந்திக்க கிறிஸ்துமஸ் பண்டிகை வரை காத்திருக்க வேண்டும்.
தீபாவளி, கும்பமேளா உள்ளிட்ட நமது பாரம்பரிய பண்டிகைகள் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கொள்கையை உலகுக்கு பறைசாற்றுகின்றன. கும்பமேளாவின்போது கங்கை நதிக்கரையில் ஒவ்வொரு நாளும் கூடும் மக்கள் வெள்ளம், ஐரோப் பாவின் ஒரு நாட்டின் மக்கள் தொகைக்கு இணையாக உள்ளது. இதுதான் இந்தியாவின் பலம்.
இந்திய திருவிழாக்கள் மக்க ளுக்கு புத்துணர்வு ஊட்டுகின்றன. பண்டிகைகளில் பாகுபாடு இல்லை. ஒளியைக் கொண்டாடும் தீபாவளியும் அதற்கு ஓர் உதாரணம். சமுதாயத்தின் சமஉரிமையை, ஒற்றுமையை தீபாவளி போன்ற பண்டிகைகள் வலுப்படுத்து கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமருடன் செல்பி
இதைத் தொடர்ந்து விழா மேடை யில் இருந்து கீழே இறங்கிய பிரதமர் மோடி செய்தியாளர்களுடன் கைகுலுக்கி பேசினார். அப்போது பிரதமருடன் செல்பி புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள் அலைமோதினர். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பாஜக தலைவர் அமித் ஷா நிருபர்களிடம் பேசியபோது, அரசமைப்புச் சட்டத்தை அனைத்து நெறிகளை காட்டிலும் அரசு உயர்வாக கருதுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படை அம்சங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘முதலில் இந்தியா’ என்பதே எனது அரசின் மதம், அரசமைப்பு சட்டம், புனித நூல் ஆகும். அனைத்து மதங்கள், சமுதாயங்களைச் சேர்ந்த மக்களும் சமஉரிமையுடன் நடத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார். செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இந்த கருத்தை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.