

இந்தியாவின் நம்பகத்தன்மையை மீட்டதாக வெளிநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி கூறிவருவது கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தற்போது பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு பேசிய அவர் இந்தியாவின் நம்பகத்தன்மையை மீட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு முன்பு வெளிநாடுகளில் இந்தியாவுக்கு நம்பகத்தன்மையே இல்லை என்பது போலவும் சர்வதேச நாடுகள் இந்தியாவை மதிக்கவில்லை என்றும் மோடி மறைமுகமாக கூறுகிறார்.
கடந்த 2014 மே மாதத்தில் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் இந்தியாவின் நம்பகத்தன்மையை மீட்கப்பட்டிருப்பதாக மோடி பேசுகிறார். எந்தவொரு வெளிநாட்டுக்கு சென்றாலும் இதே கருத்தை மோடி கூறுகிறார். இதன்மூலம் இந்தியாவுக்கு அவர் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று வெளிநாடுகள் மதித்து போற்றி வந்தது. மோடி பதவியேற்ற பிறகு அந்த நிலைமை மாறிவிட்டது, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. அவரால்தான் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு சீர்குலைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.