Published : 14 Nov 2015 09:40 AM
Last Updated : 14 Nov 2015 09:40 AM

கட்சி விவகாரத்தை கட்சிக்குள் மட்டுமே விவாதிக்க வேண்டும்: அத்வானிக்கு வெங்கய்ய நாயுடு அறிவுரை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தற்போதைய தலைமைக்கு எதிரான கருத்து களை தெரிவித்தனர். இந்த தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் தேர்தல் பொறுப்பாளர்க ளாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தின‌ர். இதனால் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு பெங்களூரூவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், நாட்டில் தற்போது எழுந்துள்ள அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து, அவை சுமூகமாக செயல்படுவதற்கு ஆதரவளிக்க வேண்டும்.

பிஹார் தேர்தல் தோல்வி என்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. இது மாநில அளவில் அதன் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மக்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளார்கள். இதற்கு எதிர்க்கட்சியினரும் பாஜக‌ மூத்த தலைவர்களும், ஊடகங்களும் தவறான கற்பிதங்களை கற்பிப்பது சரியல்ல. பாஜக மூத்த தலைவர்கள் தங்களது கருத்துகளை கட்சிக் கூட்டங்களில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதனை விடுத்து பொது இடங்களிலும், ஊடகங்களிலும் பேசுவது ஏற்புடையது அல்ல. இத்தகைய பேச்சுகளால் கட்சியின் பெயருக்கும் தலைமைக்கும் களங்கம் ஏற்படுவதை உணர வேண்டும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பாஜக போட்டியிட்டதாலே, மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மோடியின் செல்வாக்கின் காரணமாகவே அசாம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக‌ ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் பிஹார் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு குறிப்பிட்ட ஒருவரையோ அல்லது குழுவையோ பொறுப்பேற்க வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த தேர்தல் தோல்வி தேசிய அரசியலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.எனவே பிஹார் தோல்வி குறித்து மூத்த தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x