Published : 29 Nov 2015 10:29 AM
Last Updated : 29 Nov 2015 10:29 AM

இந்திய ராணுவ ரகசியங்களுடன் பாகிஸ்தான் உளவாளி கைது: தப்பிச் செல்ல முயன்றபோது அதிரடிப் படை சுற்றிவளைத்தது

இந்திய ராணுவ ரகசியம் தொடர்பான முக்கிய ஆவணங்களுடன் பதுங்கி இருந்த பாகிஸ்தான் உளவாளியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இர்பானாபாத்தை சேர்ந்தவர் முகமது இஜாஸ் என்கிற முகமது கலாம். ஐஎஸ்ஐ உளவாளியான இவர் இந்திய ராணுவ ரகசியங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடிச் செல்வதற்காக இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறை எச்சரித்திருந்தது.

இதையடுத்து, அந்த உளவாளியை தேடும் பணியில் சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து டெல்லிக்கு செல்வதற்காக இஜாஸ் காத்திருந்தபோது, அவரை சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த இந்திய ராணுவ ரகசியங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சிறப்பு அதிரடிப் படை ஐஜி சுஜித் பாண்டே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளியிடம் இருந்து இந்திய ராணுவ ரகசியங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள், பாகிஸ்தான் அடையாள அட்டை, மேற்குவங்க மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட போலி வாக்காளர் அடையாள அட்டை, போலி ஆதார் அடையாள அட்டை, டெல்லி மெட்ரோ ரயில் அட்டை, மடிக்கணினி மற்றும் பிற கணினி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பு

இந்திய ராணுவத்தின் நடவடிக் கைகள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதற்காக அவருக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வங்கதேசம் வழியாக உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதிக்குள் நுழைந்த இஜாஸ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை உளவு பார்த்து, அதன் தகவல் களை சேகரித்துள்ளார். அந்த தகவல்களுடன் டெல்லி செல்வதற் காக மீரட் கன்டோன்மென்ட் பகுதியில் காத்திருந்த, இஜாஸை சுற்றிவளைத்து கைது செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார் அட்டை பெற்றவர்

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு கொடுத்த பயிற்சியின் அடிப்படையில், கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இஜாஸ், உத்தரப் பிரதேசத்தில் பரேலி நகர மக்களுடன் நெருக்கமாக பழகி, ஆதார் அடையாள அட்டையும் பெற்றுள்ளார். ராணுவ ரகசியம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை அவர் எடுத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x