

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வாலை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
காவல்துறை அவரது காவலை 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்திருப்பதை காரணம் காட்டி மாநில பணியாளர்கள் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் உத்தரவைப் பிறப்பித்தனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வால் 2010 ஆண்டு பணியில் இணைந்தவர். தற்போது ஜெய்ப்பூரில் உள்ள மாநில பேரிடர் மீட்புப் படையில் இருந்த போது கடந்த செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் நீதித்துறை காவலில் உள்ளார்.
தவுசா மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டபோது, சில இடைத்தரகர் மூலம் நெடுஞ்சாலை கட்டுமான நிறுவனத்திடமிருந்து 38 லட்சம் லஞ்சம் கேட்டதாக அகர்வால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையின் போது, ஐபிஎஸ் அதிகாரி, தொடர்புடைய துணை ஆட்சியர்களை சம்மதிக்கவைக்க சில இடைத்தரகர்கள் மூலம் ஒரு சாலை கட்டுமான ஒப்பந்தக்காரரிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது,
முன்னதாக ஜனவரி 14 ஆம் தேதி, இரண்டு துணை ஆட்சியர்கள் பிங்கி மீனா (பாண்டிகுய்) மற்றும் புஷ்கர் மிட்டல் (தவுசா) மற்றும் ஒரு நீரஜ் மீனா, அதே வழக்கில் மணீஷ் அகர்வாலால் நியமிக்கப்பட்ட ஒரு இடைத்தரகரும் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட சில அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக ஐபிஎஸ் அதிகாரி சிக்கியுள்ளார்.