இரும்பு வேலி அமையுங்கள்; நாங்கள் ரோஜா செடிகளை நடுகிறோம்: போலீஸாரின் நடவடிக்கைக்கு காஜிபூர் விவசாயிகள் பதில்

பிகேயு தலைவர் ராகேஷ் டிகைத்  ரோஜா பூச்செடியை வழங்கிய காட்சி : படம் உதவி ட்விட்டர்
பிகேயு தலைவர் ராகேஷ் டிகைத் ரோஜா பூச்செடியை வழங்கிய காட்சி : படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read

டெல்லி-உ.பி. எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் இரும்பு வேலிகளையும், கம்பிகளையும் அமைத்து போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள நிலையில், அந்த வேலிகளுக்கு அருகே ரோஜா செடிகளை நட்டு விவசாயிகள் பதில் அளித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுவரை 11 சுற்றுப்பேச்சு நடத்தியும் எந்த உறுதியான முடிவும் இல்லை. கடந்த மாதம் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

இந்த வன்முறைக்குப்பின், விவசாயிகள் போராடும் இடங்களில் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி பல கெடுபிடிகளை உருவாக்கியுள்ளனர். பெரிய தடுப்புகலை அமைத்தல், இரும்பு வேலிகளை அமைத்தல், பலஅடுக்கு தடுப்புகள் என விவசாயிகளைச் சுற்றி அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.பி.க்களைக் கூட போலீஸார் அனுமதிக்கவி்ல்லை, அவர்களை திருப்பி அனுப்பினர். இந்நிைலயில் போலீஸார் அமைத்துள்ள பலஅடுக்கு தடுப்பு, இரும்பு கம்பி வேலி ஆகியவற்றுக்கு அருகே விவசாயிகள் நேற்று ரோஜா செடிகளையும், அழகிய பூக்கள் பூக்கும் செடிகளையும் நட்டு போலீஸாருக்கு பதிலடி கொடுத்தனர்.

இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத் கூறுகையில் “ போலீஸார் இரும்பு கம்பி வேலைகளை விவசாயிகளைச் சுற்றி அமைத்தார்கள். நாங்கள் அவர்களுக்காக ரோஜா செடிகளை இரும்பு வேலிகளுக்கு அருகே அமைத்துள்ளோம். இது எங்களின் மனநிலையை, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைதான். சாலை ஓரத்தில் ரோஜா செடிகளை வளர்க்கும் திட்டம் நடந்து வருகிறது.

டெல்லி-டாபர் திராஹா சாலையின் ஓரத்தில் ஒரு பூந்தோட்டத்தை விவசாயிகள் அமைத்துள்ளார்கள். சாலையின் ஓரத்தில் முகம் சுளிக்கும் வகையில்அசுத்தமாக இருந்த இடத்தை விவசாயிகள் தூய்மை செய்து, அதில் நறுமணம் கொடுக்கும் பலவகை பூச்செடிகளை நட்டு விவசாயிகள் வளர்த்து சூழலை அழகாக மாற்றிவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in