

சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு வரும் 13-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை முன்களப்பணியாளர்களில் 45 சதவீதம் பேருக்குதடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷான் நேற்று கூறியதாவது:
வியாழக்கிழமை வரை 45,93,427 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, மிசோரம், லட்சத்தீவு, ஒடிசா, கேரளா, ஹரியானா, பிஹார், அந்தமான் நிகோபர் தீவுகள், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுகதாாரப்பணியாளர்களில் 50 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.
சிக்கிம், லடாக், தமிழகம், ஜம்மு காஷ்மீர், சண்டிகர், தாதர் மற்றும் நாகர் ஹாவேலி, இசாம், மேகாலயா, மணிப்பூர், புதுச்சேரி ஆகியவற்றில் சுகாதாரப்பணியாளர்களில் 30 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போடப்படும் அளவை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்று மாநில சுகதாாரத்துறையினருக்கு காணொலி மூலம் மத்திய சுகதாாரத்துறை சார்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் வரும் 13-ம் தேதி முதல் தொடங்கும். 45 சதவீதம் பேர் ஏறக்குறைய தடுப்பூசிபோட்டுக்கொண்டுள்ளனர், வெள்ளிக்கிழமைக்குள் 50 சதவீதமாக உயர்ந்துவிடும் என்பதால், 2-வது கட்டத் தடுப்பூசி போடும் பணி 13-ம் தேதி தொடங்கும்.
தடுப்பூசி போடும் பணியில் தனியார் மருத்துவமனைகளையும் விரைவில் சேர்க்கும் திட்டம் இருக்கிறது.
முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டு முடித்தபின், பொதுமக்களில் மூத்த குடிமக்களுக்கு அதாவது 50வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்” எனத் தெரிவித்தார்.