

பனை, தென்னை மரத்திலிருந்து கள் இறக்கும் தொழிலாளியின் மகன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.என் தந்தையின் தொழிலை சொல்வதில் நான் வெட்கப்படவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி. சுதாகரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சுதாகரன், இரு நாட்களுக்கு முன், முதல்வர் பினராயி குடும்பத்தைப் பற்றி வெளிப்படையாக விமர்சித்தார். இதற்கு பலதரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குமுறைக் குழுவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த நிலையில் பினராயி விஜயன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு சார்பில் முதல்வர், முக்கிய விஐபிக்கள் பயணிக்க ஹெலிகாப்டர் வாங்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. இந்த திட்டத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் கண்ணூர் தொகுதி எம்.பி. கே. சுதாகரன் கடுமையாக விமர்சித்தார்.
காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் ஐஸ்வர்ய யாத்ரா எனும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்த பிரச்சாரத்தில் எம்.பி. சுதாகரன் பேசுகையில் “ பனை, தென்னை மரத்தில் கள் இறக்கி பிழைக்கும் குடும்பத்தி்ல் இருந்து வந்த பினராயி விஜயன் இப்போது எங்கு இருக்கிறார். முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பின், தற்போது ஹெலிகாப்டரில் பயணிக்க உள்ளார். கள் இறக்கும் குடும்பத்தில் இருந்து வந்து முதன் முதலில் முதல்வராகி ஹெலிகாப்டர் பயன்படுத்துகிறோம் என்பதை நினைவில் கொள்வாரா” எனத் தெரிவித்திருந்தார்.
முதல்வர் பினராயி விஜயனின் குடும்பத் தொழிலை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. சுதாகரன் பேசியது அந்த கட்சியின் மூத்த தலைவர்களுக்கே பிடிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் தாரீக் அன்வர் கூறுகையில் “ எம்.பி. சுதாகரன் பேசியது குறி்த்து காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு முறைக் குழு ஆய்வு செய்யும். எதிர்காலத்தில் யாரும் இதுபோன்று அநாகரீகமான விமர்சனங்களை வைக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில் “ முதல்வர் பினராயி விஜயன் குடும்பம், தனிப்பட்டரீதியான தாக்குதல்களை, விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம்” எனத் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ ஷானிமோல் உஸ்மான், சுதாகரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து எம்.பி. சுதாகரனிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில் “ நான் பேசியதில் உறுதியாக இருக்கிறேன். நான் பேசியது சரியா தவறா என்று பார்க்கவில்லை. நான் பேசியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே பேசாமல் இருக்கும்போது, எம்எல்ஏ ஷானிமோல் ஏன் கோபப்படுகிறார்.
நான் யாரையும் தவறாகப் பேசவில்லை. பினராயி விஜயனின் குடும்பத் தொழிலையும், குடும்பப் பின்னணியும் குறிப்பிட்டேன். இதுபோன்ற ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்து, ஹெலிகாப்டர் வாங்க வீணாகச் செலவிடுகிறாரே எனத் தெரிவித்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது” எனத் தெரிவி்த்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.விஜயராகவன் கூறுகையில் “ இதுபோன்ற சாதி அடிப்படையிலான தாக்குதல்களை தவிர்க்க வேண்டும். சுதாகரன் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதேபோன்று கடந்த 2018-ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு எடுத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில துணைத் தலைவர் எம்.சிவராஜன், “ முதல்வராக இருப்பதற்கு பதிலாக பினராயி விஜயன் கள் இறக்கும் தொழிலுக்கேச் செல்லலாம்” என விமர்சித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சுதாகரண் பேசியது குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் கூறுகையில் “ தென்னை, பனை மரத்திலிருந்து கள் இறக்கும் தொழிலாளியின் மகன் எனச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
இப்படிச் சொல்வதில் எனக்கு வெட்கம் ஏதும் இல்லை. நான் பெர்னன் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே சுதாகரனுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். எனக்கு தாழ்வுமனப்பான்மை இல்லை. நான் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.