

மத்திய அரசின் 2021 பட்ஜெட் குறித்து மீண்டும் விமர்சனம் செய்துள்ள ராகுல் காந்தி விவசாயிகள் மீது மற்றொரு தாக்குதல் என்று கூறியுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று மக்களவையில் 2021-22க்கான வரவுசெலவுத் திட்டத்தை ஒரு டேப்லெட்டிலிருந்து ஒரு வழக்கமான காகித ஆவணத்திற்கு பதிலாக, சுதந்திரத்திற்குப் பிறகு முதல் காகிதமற்ற பட்ஜெட்டாக முன்வைத்தார்.
மத்திய அரசின் 2021 பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொடர் ட்வீட்களின் வாயிலாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
திங்களன்று பட்ஜெட் குறித்த தனது முதல் எதிர்வினையில், ''நாட்டின் சொத்துக்களை நட்பு முதலாளிகளிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது'' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதனையடுத்து "நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குறு, சிறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது அந்த துறை நிறுவனங்கள் நலிவடைந்து வருகின்றன. ஆனால் மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டி, ஜிஎஸ்டி வரிச் சலுகை உட்பட எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை. குறு, சிறு தொழில் துறைக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
தற்போது தனது இன்னொரு ட்வீட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
"மோடியின் நட்பு மைய பட்ஜெட்டில், விவசாயிகள் பெட்ரோல் டீசலுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அவர்களுக்கு எந்த நிதி உதவியும் வழங்கப்பட மாட்டாது. மூன்று விவசாய எதிர்ப்பு சட்டங்களால் நசுக்கப்பட்ட பின்னர், நாட்டிற்கு உணவு வழங்கும் விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல்,"
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்கள் பாராட்டு
பட்ஜெட் 2021ஐ வரவேற்ற பாஜக தலைவர்கள் ''சுகாதாரத் துறைக்கு கணிசமான ஒதுக்கீடு, மூலதனச் செலவு, மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு, மற்றும் தொழில் தொடங்குவதற்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பாஜக தலைவர்கள் பாராட்டியிருந்தனர்.