

தந்தேவாடா: சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்தில் 63 நக்சலைட்கள் நேற்று சரணடைந்தனர். இதில், 18 பேர் பெண்கள் ஆவர். குறிப்பாக, 7 பேருக்கு தலா ரூ.8 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. மற்ற 7 நக்சலைட்களுக்கு தலா ரூ. 5 லட்சம், 8 பேருக்கு தலா ரூ. 2 லட்சம், 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் 3 பேருக்கு தலா ரூ. 50,000 பரிசுத்தொகை என 36 பேரின் தலைக்கு மொத்தம் ரூ. 1,19,50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநில அரசின் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு நக்சலைட்கள் சரணடைய முன்வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தலா ரூ. 50,000 உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும். நக்சலைட்கள் ஆதிக்கத்தை வரும் மார்ச் 31-க்குள் முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.