தோல்விக்கு பொறுப்பு ஏற்காமல் தப்பியோட நினைக்க கூடாது: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா வருத்தம் - அத்வானி உட்பட மூத்த தலைவர்கள் கருத்துக்கு ஆதரவு

தோல்விக்கு பொறுப்பு ஏற்காமல் தப்பியோட நினைக்க கூடாது: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா வருத்தம் - அத்வானி உட்பட மூத்த தலைவர்கள் கருத்துக்கு ஆதரவு
Updated on
2 min read

‘‘பிஹார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்காமல், தப்பியோட நினைக்கக் கூடாது. நண்பர்கள், மூத்த தலைவர்களின் அறிவுரையை பின்பற்ற வேண்டிய நேரம் இது’’ என்று பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா வருத்தத்துடன் கூறினார்.

பிஹார் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்தகுமார், யஷ்வந்த் சின்கா ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘டெல்லி தேர்தல் தோல்வியில் இருந்து கட்சி பாடம் கற்கவில்லை. கட்சியில் ஒரு சிலரின் நடவடிக்கைகளால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிஹார் தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆய்வு நடத்த வேண்டும். அதை பிஹார் தேர்தல் பிரச்சாத்துக்கு பொறுப்பு வகித்தவர்களிடம் வழங்க கூடாது. மேலும் வெற்றிக்கு ஒருவரை குறிப்பிட்டு சொல்லும் போது, தோல்விக்கு மட்டும் அனை வரும் பொறுப்பு என்று கூறக் கூடாது’’ என்று கோபமாக தெரிவித்திருந்தனர்.

இவர்களுடைய கருத்தை பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவும் ஆதரித்துள்ளார். பிஹார் மாநிலம் பாட்னா சாகிப் மக்களவை தொகுதியில் இருந்து பாஜக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்ருகன் சின்ஹா. ஆனால், பிஹார் தேர்தல் பிரச்சார குழுவில் இவரை சேர்க்க வில்லை. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து சத்ருகன் சின்ஹா நேற்று ட்விட்டரில் கூறியிருப்ப தாவது:

பிஹார் தேர்தல் தோல்வியில் இருந்து பின்வாங்கி ஓடக்கூடாது. முடிவு வெளியாகி விட்டது. இந்த தோல்வி சோகமானதுதான். எனினும், பொறுப்பை ஏற்காமல் தட்டிக்கழிக்கக் கூடாது. நண்பர்கள், வழிகாட்டிகள், குரு நால்வர் அணியினரின் (அத்வானி உட்பட மூத்த தலைவர்கள்) அறிவுரைகளை பின்பற்றி செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், பிஹார் தேர்தல் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று நான் சொல்லவில்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு செய்திகள் வெளியிட்டன. ஆனால், என்னை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி இருந்தால், இன்னும் சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் என்று கூறினேன். எனக்கு முதல்வராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கிடையாது.

தேர்தலில் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால், என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள், வாக்காளர் கள், ஆதரவாளர்கள் என பல தரப்பினரும் உதவி செய்திருப் பார்கள். இன்னும் சில தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும். நான் மாநிலங்களவை எம்.பி.யாக இல்லை. மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி. இரண்டு முறை மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றிருக்கிறேன். எனக்கு இங்கு ஆதரவு அதிகம்.

பிஹாரை சேர்ந்தவனாக இருந்தும் என்னை பிரச்சாரத்தில் இருந்து ஒதுக்கி விட்டனர். அதனால் என் நண்பர்கள், ரசிகர்கள், ஆதர வாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

இதற்கிடையில், ‘‘பெகுசராய் பாஜக எம்.பி. போலா சிங் கூறுகையில், ‘‘மோடியின் மேஜிக் நீடித்து நிலைக்க கூடியது அல்ல என்பதை பிஹார் தேர்தல் முடிவு காட்டிவிட்டது. பிரதமரின் மரியாதை குறைவான பிரச்சாரம் நாடாளுமன்ற தேர்தலில் உதவியாக இருந்தது. இப்போது பிஹார் தேர்தலில் அது உதவவில்லை. பாஜக தலைவர் அமித் ஷாவை சுற்றி முகஸ்துதி பாடுபவர்கள் கூட்டம்தான் உள்ளது. தலைமையில் இருப்பவர்கள் மீது முதலில் நம்பிக்கை ஏற்பட வேண் டும். இப்போது அது இல்லை’’ என்று குற்றம் சாட்டினார்.

வெடிக்கிறது மோதல்

மோடிக்கு எதிராக பேசிய மூத்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். அதற்கு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று கூறியதாவது: மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷி போன்றவர்கள் பாஜகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். அவர்களது கருத்துக்களை கட்சியினர் அவசியம் கேட்க வேண்டும். மூத்த தலைவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அது கட்சியின் நன்மைக்காகவே இருக்கும். தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், யாராக இருந்தாலும் வெளிப்படையாக விமர்சனங்களை தெரிவிக்க கூடாது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in