

மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளாகக் கூறும் பொய்களைத்தான் உண்மை என நம்பிக் கேட்டு வருகிறோம். யாரேனும் எதிர்த்துக் கேள்வி கேட்டால், உண்மையைப் பேசினால் அவர்கள் மீது தேசதுரோக வழக்கும், தேசவிரோதி பட்டமும் கொடுக்கப்படுகிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மாநிலங்களவையில் பேசினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மாநிலங்களவையில் இன்று பேசியதாவது:
''விவசாயிகள் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். ஆனால், அவர்கள் தேசவிரோதிகள், காலிஸ்தான்கள் என்று பட்டம் சூட்டுகிறார்கள். முகலாயர்கள் காலத்தில் எதிர்த்துப் போரிட்ட பஞ்சாப் விவசாயப் போர் வீரர்களுக்கு இன்று தேசவிரோதிப் பட்டம்.
டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச எல்லைகளில் அமர்ந்து போராடும் விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
வேளாண் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய பேச்சைக் கேட்டேன். உண்மையைக் கேளுங்கள் என எங்களிடம் கூறுகிறார். கடந்த 6 ஆண்டுகளாக நீங்கள் (மத்திய அரசு) உண்மை என்ற பெயரில் கூறும் பொய்களைத்தானே கேட்டு வருகிறோம்.
நாட்டின் இன்றைய சூழல் என்பது, யாரேனும் உண்மையைப் பேசினால், அவர்கள் தேசவிரோதிகளாகவும், துரோகிகளாகவும் பட்டம் சூட்டப்படுவார்கள். மத்திய அரசை யாரேனும கேள்வி கேட்டால் அவர்கள் மீது தேசவிரோத வழக்கு பாயும். இன்றைய சூழலில் அனைவரின் மீது தேசவிரோத வழக்குப் பாய்கிறது. குடும்பப் பிரச்சினைக்குக் கூட தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
விவசாயிகளின் போராட்டத்தை அவமானப்படுத்துவது நாட்டுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நல்லதல்ல. பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் பிரதமரை விவசாயிகள் மதிக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையுடன் இருக்கிறோம் என்பதால், அராஜகம் செய்யக்கூடாது.
குடியரசு தினத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களால் ஒவ்வொருவரும் வெட்கப்படுகிறோம். தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்தவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? தேசியக் கொடிக்கு நேர்ந்த அவமானத்துக்கு நடிகர் தீப் சித்துதான் பொறுப்பு. இதுவரை ஏன் அவர் கைது செய்யபப்படவில்லை?
அவர்தான் தலைமையேற்று நடத்தினார். 200 விவசாயிகள் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால், தீப் சித்து ஏன் கைது செய்யப்படவில்லை.100 இளைஞர்களைக் காணவில்லை, அவர்கள் கொல்லப்பட்டார்களா அல்லது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்களா?
பாலகோட் தாக்குதல் குறித்து ஒரு பத்திரிகையாளரும், நடிகையும் பேசியது வெளியானது. ரகசிய காப்புச் சட்டத்தை மீறி அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்தால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என குடியரசுத் தலைவர் பேசியுள்ளார். ஆயிரக்கணக்கான விவசாயிகள் உரிமைக்காக ஒன்று சேர்ந்திருக்கும்போது, அவர்களின் ஒற்றுமையை உடைத்து, போராட்டத்தை அவதூறு செய்ய அரசு முயல்கிறது.
டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில் எழுப்பிய சுவர்களுக்குப் பதிலாக சீன எல்லையில் சுவர் எழுப்பியிருந்தால், இந்திய எல்லைக்குள் வருவதற்கு சீன ராணுவத்துக்குத் துணிச்சல் இருந்திருக்காது''.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.