அகங்காரம் இருந்தால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்போமா? 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்துவோமா? மாநிலங்களவையில் பாஜக - காங். காரசார வாதம்

பாஜக எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே: கோப்புப் படம்.
பாஜக எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே: கோப்புப் படம்.
Updated on
2 min read

மத்திய அரசுக்கு அகங்காரம் இருந்திருந்தால், விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்குமா, வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைத்திருக்குமா என்று மாநிலங்களவையில் பாஜக எம்.பி. வினய் பி சஹாஸ்ரபுத்தே தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி.ஆனந்த் சர்மா, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இன்று பேசினார்கள். பாஜக எம்.பி. வினய் பி சஹஸ்ரபுத்தே பேசுகையில், “ விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுவது என அரசு உறுதி பூண்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மத்திய அரசு அகங்காரத்தை விட வேண்டும் என ஒவ்வொருவரும் கூறுகிறார்கள். ஆனால், அகங்காரம் இருந்திருந்தால், விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி இருப்போமா, அல்லது 18 மாதங்கள் வேளாண் சட்டத்தை நிறுத்தி வைத்திருப்போமா? நாங்கள் இந்த அளவு நெகிழ்வுத்தன்மையுடன் நடந்துகொள்ளும்போது அதே அளவு விவசாயிகள் ஏன் நடக்கவில்லை?

பிரதமர் மோடியின் அரசில் மக்கள் ஜனநாயகத்தை உணர்கிறார்கள். மோடியின் மேஜிக் அல்ல, மோடியின் உழைப்பு. பிரதமர் மோடியின் கடின உழைப்பால்தான், இந்தியா வலிமையாக மாறி வருகிறது. அனைவருக்குமான அரசாக மோடி அரசு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசுகையில், “நாட்டின் பொருளாதாரம் கரோனா பாதிப்பு ஏற்படும் முன்பிருந்தே மந்தநிலையில்தான் இருந்தது. கரோனா பாதிப்புக்குப் பின் நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமானது. அதிலும் குறிப்பாக, லாக்டவுனில் ஏராளமான மக்கள் வேலையிழந்தார்கள். இந்தச் சூழலுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு.

இந்தச் சூழலில், விவசாயிகள் நீதிக்காகவும், உரிமைக்காகவும் போராடுகிறார்கள். வேளாண் சட்டங்களில் இந்த அளவுக்குச் சூழல் உருவாகியுள்ளதென்றால் அதற்கு மத்திய அரசுதான் காரணம். இதுவரை விவசாயிகள் போராட்டத்தில் 194 விவசாயிகள் உயிரழந்துள்ளார்கள். கரானோ பணியின்போது மருத்துவர்களும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங் பஜ்வா பேசுகையில், “கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது, நடந்த வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும்.

செங்கோட்டையில் மதரீதியான கொடி ஏற்றப்பட்டபோது, ஒட்டுமொத்த தேசமே வேதனை அடைந்தது. பாரபட்சமற்ற விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் உரையில் வேளாண் சட்டங்கள் குறித்துக் குறிப்பிட்டது தேவையற்றது, துரதிர்ஷ்டம். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in