

டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களின் தலைவர் ராகேஷ் திகைத்தின் பெயரில் முகநூலில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டு, ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மீதான புகாரின் பேரில் உத்தரப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் ஊர்வலத்தின் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு, போராடும் விவசாயிகள் வீடு திரும்பத் தொடங்கினர். இதைக் கண்டு அதிர்ந்த பாரதிய கிஸான் சங்கத்தின் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகைத் அழுதபடி கொடுத்த குரலால் மீண்டும் போராட்டத்தில் கூட்டம் சேர்ந்தது. இதனால், அதிக முக்கியத்துவம் பெற்ற ராகேஷ் திகைத்தின் பெயரைக் கெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
அதில் ஒன்றாக அவரது பெயரில் முகநூலில் போலிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆபாச வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ராகேஷ் திகைத் அளித்த புகாரின் பெயரில் காஸியாபாத்தின் கவுஸாம்பி பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன் விசாரணையில் அந்தக் கணக்கு, பஞ்சாப்பின் லூதியானாவில் இருந்து இயக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 100 நண்பர்களைச் சேர்த்து ராகேஷ் திகைத் முகத்தை மார்ஃபிங் செய்து ஆபாசப் படங்களில் சேர்த்து வைரலாக்க முயன்றுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு விவசாய சங்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உ.பி. போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முள் கம்பிகள் அகற்றம்
இதனிடையே, டெல்லியின் எல்லைகளான காஜிபூர், டிக்ரி மற்றும் சிங்கு ஆகியவற்றைச் சுற்றி இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. விவசாயிகளுக்குப் பாதுகாப்பு எனும் பெயரிலான இந்த நடவடிக்கையில் அவர்களது போராட்டக் களத்திற்குள் வாகனங்கள் செல்லாதபடி, சாலையில் கத்தி போன்ற கூர்மையான இரும்புக் கம்பிகள் நடப்பட்டன.
இதனால் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் விவசாயிகள் இருக்கும் பகுதிக்குச் செல்ல 4 முதல் 13 கி.மீ. தொலைவிற்கு நடக்க வேண்டி இருந்தது. இதன் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையாகின.
இதன் காரணமாக அவை இன்று முதல் காவல்துறையினரால் அகற்றப்பட்டு வருகின்றன. இரும்புக் கம்பிகள் காலில் குத்தி, பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் அவை அகற்றப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.