

சமூக வலைதளங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தியோகர் காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி குமார் சின்ஹா கூறியதாவது:
''சமூக வலைதளங்களில் கிரெடிட் கார்டு உள்ளிட்ட பயனர்களின் தரவுகளைத் திருடி மோசடியில் ஈடுபட்டு வந்த சைபர் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 21 மொபைல் போன்கள், 32 சிம் கார்டுகள், 15 ஏடிஎம் கார்டுகள், பல்வேறு வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ஒரு காசோலை புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தியோகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரையும், ஜம்தாராவைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர், இதேபோன்ற குற்றத்திற்காக முன்பு சிறை தண்டனை பெற்றவர்.
சமீபமாதங்களில் 300க்கும் மேற்பட்ட இணையக் குற்றவாளிகளைத் தியோகர் காவல்துறை கைது செய்துள்ளது''.
இவ்வாறு தியோகர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.