Published : 05 Feb 2021 03:15 AM
Last Updated : 05 Feb 2021 03:15 AM

ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் மாற்றுத் திறனாளி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

தவழ்ந்து செல்லும் மாற்றுத் திறனாளி ஒருவர், தன் உடல் உபாதைகளை துளியும் பொருட்படுத்தாமல் நீராதாரங்களில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை படகில் போய் அகற்றி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசியதைத் தொடர்ந்து அந்த மாற்றுத் திறனாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கேரளத்தின் கோட்டயம் மாவட்டம், மஞ்சனிகாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பன் (69). ஐந்து வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவரது இரு கால்களும் செயல் இழந்தன. தவழ்ந்து செல்லும் மாற்றுத் திறனாளியான இவர், திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்ந்து வந்தவருக்கு வயது மூப்பு காரணமாக முன்பு போல் பணி செய்ய முடியவில்லை.

இதனால் கடந்த 6 ஆண்டுகளாக கோட்டயம் மாவட்டத்தின் வேம்பநாடு ஏரியிலும், குமரகத்தின் பிற நீரோடைகளிலும் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதனை விற்று வாழ்ந்து வருகிறார். இதற்காகவே வாடகைக்கு குட்டி படகை எடுத்துப் போய் தானே இந்தப் பணிகளை செய்கிறார். படகில் அமர்ந்து கொண்டே தண்ணீரில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க நீளமான குச்சிகளும் வைத்திருக்கிறார். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகமாகக் கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் சுற்றுச்சூழல் காப்பின் ஒரு அங்கமாக இதையே பணியாக செய்து வருகிறார் .

இதனால்தான், ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ராஜப்பன் முன்னுதாரணமாக இருக்கிறார். அவரை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு நாமும் இதேபோல் செயல்பட வேண்டும்’’ என்று மன் கி பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் ராஜப்பன் குறித்து நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் பிரதமர் மோடி. இதன் காரணமாக ராஜப்பனின் சூழல் காப்புப் பணி இந்தியா முழுவதும் தெரியவந்தது.

இதுகுறித்து ராஜப்பன் இந்து தமிழ் நாளிதழிடம் கூறியதாவது: கேரளத்தை கடவுளின் தேசம் என்பார்கள். அதற்குக் காரணமே இங்குக் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்கள்தான். அதிலும் குறிப்பாக நீராதாரங்கள். நானும் கூட நீராதாரங்கள் சூழ வாழ்பவன் தான். ஆனால் இப்போது இந்த நீர்நிலைகள் பிளாஸ்டிக் பாட்டில்களின் ஆக்கிரமிப்பாக இருக்கிறது. வேம்பனாடு ஏரிக்கு சுற்றுலா வருபவர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு பாட்டிலை தூக்கி வீசிவிடுகிறார்கள். இதேபோல் படகு இல்லத்துக்கு சுற்றுலா வருவோரும் பிளாஸ்டிக்கை தூக்கி ஏரியில் வீசுவார்கள். இதனால் பல இடங்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களாக தண்ணீருக்குள் மிதப்பதைப் பார்த்தேன். சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த பாட்டில்களை சேகரிக்க தொடங்கினேன்.

ஆனால் இதில் பெரிய வருமானம் எதுவும் கிடைக்காது. நான் செல்லும் படகு நிறைய பாட்டில்கள் கிடைத்தாலும்கூட அதிகபட்சம் 2 கிலோ பாட்டில்கள் தான் இருக்கும். ஒரு கிலோ பிளாஸ்டிக் பாட்டிலை வெறும் 12 ரூபாய்க்கு எடுப்பார்கள். ஆனால் இது வருமானத்துகாக நான் செய்யும் செயல் அல்ல. சூழலைக் காப்பதில் என்னால் ஆன சிறுமுயற்சி இது!

யாராவது ஒருவர் நீராதாரங்களுக்கு கேடு தரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றதானே வேண்டும். அதுதானே இயற்கை நீதி. அதை நான் செய்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தவழ்ந்து கொண்டே சாலையில் செல்வதைவிட படகில் போவதை பாதுகாப்பாகவும் உணர்கிறேன். நீராதாரங்களில் சேகரிக்கும் பாட்டில்களை சுத்தம் செய்து வீட்டிலேயே வைத்துக் கொள்வேன். உள்ளூர் கடைக்காரர் வீட்டுக்கே வந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை பாட்டில்களை வாங்கிக் கொள்வார். எனது வீடும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கேரள பெருமழையில் இடிந்துவிட்டது.

அப்போதெல்லாம் நான் காயலுக்குள் ஒரு படகு இல்லத்தில் தான் தஞ்சம் புகுந்து வாழ்ந்தேன். என் சகோதரி வீட்டில் இருந்து எனக்கு தினமும் சாப்பிட உணவு தந்துவிடுவார். எனக்குத் தேவைகள் என பெரிதாக எதுவும் இல்லாததால் சூழல் காப்புக்கு பெரும்பகுதி நேரத்தையும், உழைப்பையும் செலவிட முடிகிறது. கரோனா காலத்தில் இந்த ஏரி மிகவும் சுத்தமாக இருந்தது. சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் பிளாஸ்டிக் பாட்டில்களும் இல்லாமல் இருந்தது. இப்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகமாக மிதக்கிறது. இது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. சிலநேரங்களில் படகு இல்லத்தினரும் நேரடியாகவே என்னிடம் பாட்டிலைக் கொடுக்கின்றனர். பிரதமர் என்னை பற்றிப் பேசியதை நானும் ரேடியோவில் கேட்டேன். பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு ராஜப்பன் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து ராஜப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மாற்றுத் திறனாளியான அவருக்கு பொருளாதார ரீதியாகவும் பலரும் உதவி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x