Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க குடியரசு தலைவருக்குதான் அதிகாரம்: தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்து ஆளுநர் விளக்கம்

புதுடெல்லி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என தமிழக ஆளுநர் விளக்கமளித்து இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, 29 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் தனது தண் டனையை நிறுத்தி வைத்தும், விடுதலை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய் திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜன.21-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் அதிருப்தி

அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்மீது ஆளு நர் நீண்டகாலமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ‘‘இந்த விவ காரத்தில் தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார்’’ என உறுதியளித்தார். அதையடுத்து நீதிபதி கள், பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் வழங்கி விசாரணையை 2 வார காலத்துக்கு தள்ளி வைத்திருந்தனர். இந்த வழக்கு பிப்.9-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சக துணைச் செய லாளர் முகமது நசீம்கான், உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பேரறிவாளன் விடுதலை விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆராய்ந்தார். அதையடுத்து பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என்று தனது விளக்கத்தை கடந்த ஜன.25-ம் தேதி மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு சட்டப்பூர்வமாக ஆராய்ந்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரை தீர்மானத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர், தற்போது இதுதொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என மத்திய அரசுக்கு விளக்கம் அளித் துள்ளார். இதன்மூலம், தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவையில்..

இதனிடையே, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நேற்று நடந்த விவாதத்தின்போது முதல்வர் பழனி சாமி கூறியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சம்பந்தப்பட்டவர் களில் நளினி, முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகியோரின் தூக்கு தண் டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்தது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தமிழக ஆளுநருக்கு அனுப்பிய கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

கருணை மனுக்கள்

பின்னர், உயர் நீதிமன்ற உத்தர வின்படி, 2000-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச் சரவைக் கூட்டத்தில், ‘நளினிக்கு மட்டும் மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைக்கலாம். மற்றவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம்’ என்று முடிவெடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவரால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆனால், அந்த 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 ஆகஸ்ட் 29-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, 3 பேரின் மரண தண் டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014 பிப்ரவரி 18-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்பிறகு, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, 2014 பிப்ரவரி 19-ம் தேதி 7 பேரையும் முன்விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார். அன்று நடந்த அமைச் சரவைக் கூட்டத்தில், ‘7 பேரும் சுமார் 23 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவ தால், மாநில அரசுக்கு உள்ள அதி காரத்தை பயன்படுத்தி முன்விடுதலை செய்யலாம்’ என்று முடிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித் ததால், மத்திய அரசின் கருத்து கோரப் பட்டது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

மத்திய அரசு கோரிய ஆவணங்களை அளித்த பின்னரும், 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுவிக்க ஒப்புதல் அளிக்க இயலாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, 2018 செப்டம்பர் 9-ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில், 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

திமுக நாடகம்

இதன்மூலம், 7 பேர் விடுதலையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுக அரசும் மட்டுமே என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆனால், இதை வைத்து ஓர் அரசியல் நாடகத்தை திமுக அரங்கேற்றி வருகிறது. 7 பேர் விடுதலைக்காக தாங்கள் போராடுவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, தேர்தலில் அனுதாபம் பெற நாடகம் நடத்துகின்றனர். ஆனால், உண்மையாக 7 பேருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x