Published : 12 Jun 2014 10:00 AM
Last Updated : 12 Jun 2014 10:00 AM

பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகள் மீது உரிமை கோரும் தமிழகம்: கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி

கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ள நான்கு அணைகளுக்கு தமிழகம் உரிமை கோருவது தொடர்பாக, கேரள சட்டப்பேரவையில் புதன்கிழமை பெரும் அமளி ஏற்பட்டது. கேரள சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் இது தொடர்பாகக் கேள்வியெழுப்பினார். கேள்வி நேரத்தின் போது அவர் பேசியதாவது:

கடந்த டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தேசிய அணைப்பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டத்தில், கேரள எல்லைக்குள் அமைந்துள்ள நான்கு அணைகளுக்கு தமிழகம் உரிமை கோரியுள்ளது. இது கேரளத்தில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் கவனத்துக்கு வரவில்லை.

தேசிய அணைப்பாதுகாப்புக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் முல்லைப் பெரியாறு, தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் மற்றும் பரம்பிக்குளம் அணைகளின் உரிமையைக் கோரினர். இதற்கு கேரள அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதன் விளைவாக, தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு, பேரணைகளின் தேசியப் பதிவேட்டில் ‘உரிமை’ என்ற வார்த்தை தமிழகத்துக்கு ஆதரவாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கேரள அணைப் பாதுகாப்பு ஆணையத்தின் கோரிக்கையையடுத்து கேரள அரசுக்கு தமிழகம் அனுப்பியுள்ள கடிதத்தில், “பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட (பிஏபி) தொகுப்பு அணைகள் குறிப்பாக பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் தமிழகத்துக்கு உரிமையுடையவை, தமிழகத்தால் பராமரிக்கப்பட்டும், இயக்கப்பட்டும் வருபவை.

கேரள அணைப் பாதுகாப்பு ஆணையம் இந்த அணைகளை எந்தச் சூழ்நிலையிலும் ஆய்வு செய்யவேண்டிய தேவையில்லை. இதற்கு அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. இவ்வாறு, ஜமீலா பிரகாசம் பேசினார்.

பெரும் அமளி

இதற்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப், இந்நடவடிக்கைகள் அரசின் கவனத்துக்கு வரவில்லை எனப் பதிலளித்தார். இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சியினர், மாநிலத்தின் நலனைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் தேவை என வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து குறுக்கிட்ட முதல்வர் உம்மன் சாண்டி, இவ்விவகாரத்தை தீவிரமாக ஆய்ந்து, நாளை(வியாழக்கிழமை) அவையில் விரிவாக விளக்கமளிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x