Last Updated : 04 Feb, 2021 06:24 PM

 

Published : 04 Feb 2021 06:24 PM
Last Updated : 04 Feb 2021 06:24 PM

உ.பி.யில் காணாமல் போன மகளைக் கண்டுபிடிக்க டீசலுக்கு ரூ.12,000: பிச்சை எடுக்கும் தாயிடமிருந்து கையூட்டு பெற்ற 2 போலீஸார் பணியிடைநீக்கம்

புதுடெல்லி

உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போன மகளைத் தேடுவதற்காக, வாகன டீசலுக்கு பிச்சை எடுக்கும் தாயிடம் இருந்து ரூ.12,000 கையூட்டு பெற்ற இரண்டு போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயர் அதிகாரிகள் தலையீட்டால் தற்போது அந்த இளம்பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.

உ.பி. அருகே கான்பூரின் சானி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான ஏழைப் பெண். இவரது 17 வயது மகள் கடந்த மாதம் 7ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதனால், சம்பந்தப்பட்ட சக்கேரி காவல் நிலையத்தில் அவரின் தாய் புகார் அளித்துள்ளார். இதற்காகத் தொடர்ந்து 25 நாட்களாக நாள்தோறும் ஏழைத் தாய் காவல் நிலையம் வந்துள்ளார்.

அந்தத் தாயிடம் போலீஸார் வாகனத்தில் சென்று மகளைக் கண்டுபிடிக்க என அவ்வப்போது டீசலுக்காகப் பணம் கேட்டுள்ளனர். இதையும் யாசகம் எடுத்து பிழைத்து வந்த தாய், சிறிது சிறிதாகக் கொடுத்துள்ளார்.

இதன் பிறகும் அவரது பெண் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்று முன்தினம் அவர் அழுதபடி கான்பூரின் டிஐஜி அலுவலகம் வந்துள்ளார். இவரது புகாரில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், டீசலுக்காகக் காவல்துறையினர் கையூட்டு பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், சக்கேரியின் துணை ஆய்வாளரான ராஜ்பால்சிங் மற்றும் விசாரணை அதிகாரியான அருண்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து டிஐஜி பிரதீந்தர் சிங் உத்தரவின் பேரில், காணாமல் போன இளம்பெண்ணும் மறுநாளே கண்டுபிடிக்கப்பட்டார்.

இளம்பெண் சானி கிராமத்து இளைஞரை விரும்பித் திருமணம் செய்துகொண்டு கான்பூரில் மறைந்து வந்துள்ளார். அவர் மைனர் என்பதால் போலீஸார் அவரைத் தன் தாயுடன் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x