

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வான வரலாற்றுச் சிறப்புமிக்க சவுரி சவுரா சம்பவத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி நிகழ்ச்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.
2021 பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 2022 பிப்ரவரி 4 வரை, 75 மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த உ.பி. மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை நினைவுகூரும்வகையில் சவுரி சவுரா நூற்றாண்டின் தொடக்க நிகழ்ச்சிகள் கோரக்பூரில் இன்று காலை தொடங்கியது.
சவுரி சவுரா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் காணொலி நிகழ்ச்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.
விழாவின்போது, தொடக்க நாளின் முக்கிய நிகழ்வாக நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தபால் தலையையும் மோடி வெளியிட்டார்.
இன்றைய நிகழ்வில் சவுரி சவுரா சம்பவத்தோடு தொடர்புடையவர்களின் சந்ததியினர் 99 பேர் கவுரவிக்கப்பட உள்ளனர்.
சவுரி சவுரா தாக்குதலுக்குக் காரணம்
1922இல் மகாத்மா காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள சவுரி சவுரா காவல் நிலையத்தைத் தாக்கி போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த பலரும் கொல்லப்பட்டனர். வன்முறை காரணமாக காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டார்.
சவுரி சவுராவில் காவல் துறையினர் கொல்லப்பட்டதன் விளைவாக நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 228 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். எட்டு மாத விசாரணைக்குப் பின்னர் அவர்களில் 6 பேர் இறந்தனர். 172 பேர் தூக்கிலிட உத்தரவிடப்பட்டது.
மரண தண்டனையை மறு ஆய்வு செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம் இறுதியாக ஏப்ரல் 1923இல் 110 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு நீண்ட சிறை தண்டனையும் விதித்தது. 19 பேருக்கு மட்டும் மரண தண்டனை விதித்தது.