

டெல்லி அருகே போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.
டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் சீக்கிய மதக் கொடியை ஏற்றினர். டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி அருகே காஸிப்பூரில் போராடும் விவசாயிகளை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் இருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர்.
காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதல், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுகதா ராய் ஆகியோர் சென்றனர்.
இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
அவர்கள் காஸிப்பூர் எல்லையை அடைந்ததும் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகளை எம்.பி.க்கள் சந்தித்தால் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் போலீஸார் தடுத்து நிறுத்தினர். சாலைகளில் தடுப்புகள் மற்றும் முள் கம்பிகள் போடப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன.