

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகளுக்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நன்கொடை வசூலித்து வருகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா அமைப்புகள் நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை கட்டாயப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு நிதி வசூலிக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் யூனியன் (என்எஸ்யுஐ) ராஜஸ்தானில் நேற்று தொடங்கியது.‘ராம நாமத்துக்கு ரூபாய் 1’ என்ற பெயரில் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய மாணவர் யூனியனின் ராஜஸ்தான் தலைவர் அபிஷேக் சவுத்ரி கூறும்போது, "மக்களை கட்டாயப்படுத்தி ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை பணம் வசூலித்து வருகின்றன. கடவுளுக்கு பணம் தேவையில்லை; மாறாக, உண்மையான பக்திதான் தேவை. இந்த செய்தியை மக்களிடம் பரப்பும் விதமாகவே ராமர் கோயிலுக்காக நிதி வசூலிக்கும் இயக்கத்தை தொடங்கியுள்ளோம். கடவுளுக்கு ரூ.1 கோடி காணிக்கை வழங்குவதும், பக்தியுடன் 1 ரூபாய் வழங்குவதும் ஒன்றுதான்.
இதனை உணர்த்தவே ‘ராம நாமத்துக்கு ரூபாய் 1' என்ற பெயரில் இந்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். 15 நாட்கள் நடைபெறும் இப்பிரச்சாரத்தில் வசூலாகும் பணத்தை அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்குவோம்" என்றார்.