

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் உண்மையை தெரிந்து கொண்டு கருத்த கூற வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க பாடகி ரிஹானா, ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கிளாடியா வெப், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினரும் எழுத்தாளருமான மீனா ஆகியோர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பிறகுதான் வேளாண் துறை சீர்திருத்தம் தொடர்பான 3 புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு கூடுதல் சந்தை வாய்ப்பை வழங்குவதுடன், அவர்களுடைய வருமானத்தை அதிகரிக்க வகை செய்கின்றன. இந்நிலையில், இந்த சட்டங்கள் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் சிலர் குறை கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும்.
எனவே, இதுபோன்ற விவகாரத்தில் கருத்து கூறுவதற்கு முன்பு அது தொடர்பான உண்மை நிலவரத்தை ஆராய வேண்டும். முக்கிய பிரபலங்களும் மற்றவர்களும் சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகள் சில நேரங்களில் துல்லியமானதாகவும் பொறுப்பானதாகவும் இருப்பதில்லை” என கூறப்பட்டுள்ளது.