

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்விபிசி பக்தி சேனல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை முதல் கன்னடம் மற்றும்ஹிந்தி மொழிகளிலும் ஒளிபரப்பாக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கு, தமிழ் ஆகியஇரு மொழிகளில் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (எஸ்விபிசி) எனும் பெயரில் ஆன்மிக செய்திகள், திருப்பதி தேவஸ்தான கோயில்களின் தரிசன விவரங்கள், விழாக்களை ஒளிபரப்பி வருகிறது. பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய நாட்களில் நேரடிஒளிபரப்பும் செய்கிறது. மேலும், தினந்தோறும் சுவாமிக்கு நடைபெறும் கல்யாண உற்சவநிகழ்ச்சிகளையும் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோயில்களில் நடைபெறும் விழாக்களையும் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.
இந்நிலையில், எஸ்விபிசி சேனலின் அறங்காவலர் குழு கூட்டம், தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி தலைமையில் நேற்று திருப்பதியில் நடைபெற்றது. பின்னர், ஜவஹர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஏப்ரல் 13-ம் தேதி தெலுங்கு உகாதி பண்டிகை முதல் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் எஸ்விபிசி சேனல் செயல்படும். எச்டி முறையில் மிக துல்லியமாக அனைத்து மொழி சேனல்களும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார். இந்த அறங்காவலர் குழுகூட்டத்தில் எஸ்விபிசி சேனல் தலைவர் சாய்கிருஷ்ணா யாசேந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.