மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு: 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு: 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை
Updated on
1 min read

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தமாக 23.55% ஊதிய உயர்வுக்கு வகை செய்யும் ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரை அறிக்கை, மத்திய அரசிடம் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. 6-வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகள் கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதிய கமிஷன் நியமிக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராய், பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், மீனா அகர்வால் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்த கமிஷனின் 900 பக்க அறிக்கை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒட்டுமொத்தமாக 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளத்தில் 16% அதிகரிக்கவும் படிகளை 63% உயர்த்தவும் ஓய்வூதியத்தை 24 % உயர்த்தவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும் அதிகபட்சம் ரூ.2.25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு, 24 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் ராணுவத்தில் அமல்படுத்தப்பட்டிருப்பதுபோல துணை ராணுவப் படைகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும். 52 படிகளை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வசதியை ஏற்படுத்த வேண்டும். ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வழங்க வேண்டும் என்றும் ஊதிய கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in