Last Updated : 03 Feb, 2021 06:40 PM

 

Published : 03 Feb 2021 06:40 PM
Last Updated : 03 Feb 2021 06:40 PM

நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை செல்போன்களில் பதிவுசெய்யக் கூடாது: வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை

புதுடெல்லி

நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை செல்போன்களில் பதிவுசெய்யக் கூடாது. இது உரிமை மீறல் நடவடிக்கைக்கு உள்ளாகும் என மாநிலங்களவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு உறுப்பினர்களிடம் எச்சரித்தார்.

நாடாளுமன்ற அவைகளின் நடவடிக்கைகளை சில எம்.பி.க்கள் உள்ளே அமர்ந்தபடி தமது செல்போன்களில் பதிவு செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. நேற்று மாநிலங்களவையின் சில நடவடிக்கைகள், முகநூல் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இப்புகாரை அடுத்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இன்று எம்.பி.க்களை எச்சரித்தார்.

இதுகுறித்து இன்று மாநிலங்களவையில் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், ''செல்போன்களில் அவை நடவடிக்கையைப் பதிவு செய்வது உரிமை மீறல் ஆகும். இப்பதிவுகளை ஊடகங்களும் பயன்படுத்தக் கூடாது. அவையினுள் செல்போன்களுக்குத் தடை இருக்கும் நிலையில் சில எம்.பி.க்கள் இங்கு அவை நடவடிக்கைகளைப் பதிவு செய்ததாகப் புகார் வந்துள்ளது. இதுபோன்ற முறையில்லாத செயல்களில் இருந்து உறுப்பினர்கள் விலகியிருக்க வேண்டும்.

இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவினால், அதை எடுத்தவர்கள் உரிமை மீறலுக்கு உள்ளாக நேரிடும். இதுபோன்ற செயல்கள் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானவை என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்தார்.

தற்போது நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் கரோனா சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் இரண்டு அவைகளும் ஒரே சமயங்களில் நடைபெறுவதில்லை. காலை 11 மணி முதல் மாநிலங்களவையும், பிற்பகல் 3 மணி முதல் மக்களவையும் தொடங்கி நடைபெறுகின்றன.

இவற்றில், சமூக விலகலைக் கடைப்பிடிக்க மாநிலங்களவை எம்.பி.க்கள் மக்களவையிலும் அமர வைக்கப்படுகின்றனர். அத்துடன் எம்.பி.க்கள் இரண்டு அவைகளின் பார்வையாளர்கள் மாடங்களிலும் அமர வைக்கப்படுகின்றனர். இந்த மாடங்களில் அமரும் எம்.பி.க்களில் சிலர் நேற்றைய கூட்டத்தை செல்போன்களில் பதிவு செய்த படங்கள், காணொலிகள், சமூக வலைதளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x