Last Updated : 03 Feb, 2021 06:14 PM

 

Published : 03 Feb 2021 06:14 PM
Last Updated : 03 Feb 2021 06:14 PM

50 முக்கிய மத வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுத்தல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை: என்சிபிசிஆர் கவலை

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

ஆக்ராவில் தாஜ்மஹால், அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமி உள்ளிட்ட 50 முக்கிய வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுத்தல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை அதிகரித்துள்ளது என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்தியாவில் புத்த கயா, கஜுரஹோ, ஹாஜி அலி தர்ஹா, கும்ப மேளா, ரிஷிகேஷ் பூரி ஜெகன்நாத் கோயில், தாஜ்மஹால், அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி உள்ளிட்ட முக்கியமான மதம் சார்ந்த 50 வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகள் மீதான உரிமை மீறல்கள் அதிகமாக நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுத்தல், குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகரித்துள்ளது. குழந்தைகள் தெருவில் ஆதரவற்று அலைதல் போன்றவை நடக்கின்றன. இது குழந்தைகளின் உரிமைகளை மட்டும் சுரண்டுவது மட்டுமல்லாமல், உலக அளவில் நாட்டின் தோற்றத்தை மதிப்பு மிகுந்ததாக பிரதிபலிக்காது.

குழந்தைகள் உரிமைச் சட்டங்களைப் பின்பற்றாது இருத்தல், குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளின் பாதுகாவலர்கள், மத்திய அரசு, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், நிதியுதவியைப் பெறுவதைத் தடுக்கும் பல்வேறு காரணிகள், பல்வேறு சமூக விரோத அமைப்புகளின் செயல்பாடுகளால் குழந்தைகள் உரிமைகள் சுரண்டப்படுகின்றன.

குழந்தைகள் நல அதிகாரிகள், கடத்தலுக்கு எதிரான பிரிவு, தன்னார்வத் தொண்டு நிறுவனம், மதம் சார்ந்த அறக்கட்டளைகள், குழுக்கள் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து கூட்டாகச் செயல்பட வேண்டும்.

குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைக் கடத்தல் ஆகியவற்றைத் தடுத்தல், குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவிகள் கிடைக்கிறதா என்பதையும் ஆணையம் இனிமேல் தீவிரமாகக் கண்காணிக்கும்.

மேலும், ஆன்லைன் மூலம் புகார்களைப் பதிவு செய்யும் முறையை மேம்படுத்த இருக்கிறோம். இதன் மூலம், குடிமக்கள், நிர்வாகிகள் புகார்களைப் பதிவு செய்தல், புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பதிவு செய்தல், குழந்தைகள் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுத்தல் போன்றவற்றை அதிகப்படுத்த முடியும். மேலும், குழந்தைகள் உரிமைகளைக் காக்க, நியூ இந்தியா ஜங்ஷன் (என்ஐஜே), ஐ-கேன் ஆகிய பிரச்சாரம் செய்யப்படும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x