இந்தியாவில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கு எதிராக 2019-ம் ஆண்டில் குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி: கோப்புப் படம்.
உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி: கோப்புப் படம்.
Updated on
1 min read

2019-ம் ஆண்டில் இந்தியாவில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கு எதிராகக் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி இன்று தெரிவித்தார்.

இந்தியாவில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளதா, அதன் விவரங்கள் வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கம் அளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி இன்று பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இந்தியாவில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கு எதிராகக் கடந்த 2019-ம் ஆண்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது உண்மைதான். 2019-ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, பட்டியலினத்தவர்களுக்கு எதிராக 7.3 சதவீதக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பழங்குடியினருக்கு எதிராக 26.5 சதவீதக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவனையின்படி, போலீஸ், பொதுச்சட்டம் ஆகியவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும். சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், மக்களின் சொத்துகள், உயிரைப் பாதுகாத்தல், விசாரணை நடத்துதல், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை விசாரணை செய்து நீதியின் முன் நிறுத்துதல் என்பது மாநில அரசுகளின் கடமை.
இதுபோன்ற குற்றங்களைத் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் அடக்குவதற்கு மாநில அரசுகளுக்குப் போதுமான திறமை இருக்கிறது.

அதேசமயம், பழங்குடியினர், பட்டியலினத்தவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (2015-ல் திருத்தப்பட்டது) கீழ் பாதுகாக்க வேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது.

இந்தத் திருத்தப்பட்ட சட்டத்தில் புதிய வகையான குற்றங்கள், தண்டனைகள், விசாரணையை வலுப்படுத்துதல், சிறப்பு நீதிமன்றம் அமைத்தல், சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்தல் ஆகிய பிரிவுகள் உள்ளன.

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம். குற்றங்களின் தன்மையை அறிந்து, வழக்குப் பதிவு செய்த நாளில் இருந்து விசாரணையை 2 மாதங்களுக்குள் நீதிமன்றத்தால் முடிக்க முடியும்''.

இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in