

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் செயல்பட்டு வரும் ஆலோசனைக் குழுவில் ஸ்ரீதர் வேம்பு உறுப்பினராகச் செயல்படுவார்.
தஞ்சாவூரிலுள்ள உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வேம்பு. அமெரிக்கா, சிலிக்கன் பள்ளத்தாக்கில் பணியாற்றி வந்த அவர், கிராமப்புறங்களைத் தொழில்நுட்பம் சார்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, சோஹோ என்னும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கினார். தற்போது அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உட்பட எட்டு நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவில் தன்னை நியமித்ததற்காக அஜித் தோவலுக்கு ஸ்ரீதர் வேம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ''தொழில்நுட்பம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டுக்காகவே நான் இந்தியா திரும்பினேன். தற்போது அளிக்கப்பட்டிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவி மூலம் நாட்டுக்குப் பணியாற்ற மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது'' என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.