டிராக்டர் பேரணி வன்முறை: விசாரணைக் குழு அமைக்கக் கோரும் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. விவசாயிகளில் ஒரு பிரிவினரும், போலீஸாரும் பல்வேறு இடங்களில் மோதிக்கொண்டனர்.

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் சீக்கிய மதக் கொடியை ஏற்றினர். டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் டெல்லி டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற இரு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனோகர் லால் சர்மா என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமை நீதிபதி பாப்டே அமர்வு கூறுகையில் “ இந்தக் கலவரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது, விசாரணை முழுமையாக நடக்கும் என நம்புகிறோம். பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் சட்டம் தனது கடமையைச் செய்யும் எனத் தெரிவித்திருந்தார். இதன் அர்த்தம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நேரத்தில் விசாரணையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை” எனக் கூறி மனுக்களை விசாரணைக்க மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in