Last Updated : 03 Feb, 2021 02:35 PM

 

Published : 03 Feb 2021 02:35 PM
Last Updated : 03 Feb 2021 02:35 PM

மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் அளித்து போராடும் விவசாயிகளுக்கு உதவும் உள்ளூர்வாசிகள்

புதுடெல்லி

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் அளித்து சிங்குவின் உள்ளூர்வாசிகள் உதவத் துவங்கி உள்ளனர். இந்த வசதிகளை அளித்த அரசு ரத்து செய்ததால் சூழல் மாறுகிறது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடுகின்றனர். டெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இப்போராட்டத்தில் குடியரசு தினத்திற்கு பின் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.

அன்று நடைபெற்ற டிராக்டர் ஊர்வலத்தில் நிகழ்ந்த வன்முறையால் விவசாயிகள் போராட்டத்திற்கு நெருக்கடி உருவானது. இதனால், அவர்களுக்கு எல்லைகளில் கிடைத்து வந்த மின்சாரம், தண்ணீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை அரசு நிறுத்தியது.

இதன் காரணமாக ஹரியாணாவின் சிங்கு எல்லையில் பரிதவித்து வந்த விவசாயிகளுக்கு அப்பகுதியின் உள்ளூர்வாசிகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இவர்கள் மூலமாக மின்சாரம், தண்ணீர் ஆகிவற்றுடன் தங்களது கழிவறைகளையும் பயன்படுத்த அப்பகுதிவாசிகள் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து சுங்கு பகுதியில் போராடும் விவசாயிகள் கூறும்போது, ‘‘ஜனவரி 27 அன்று எங்களுக்கு அரசால் அளிக்கப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டது.

அன்றைய தினமே உள்ளூர்வாசிகள் மின்சார உதவியை அளித்து எங்களை இருட்டில் இருந்து காத்தனர். இதற்காக அவர்கள் நான் அளித்த மின்சாரக் கட்டணத்தையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.’’ எனத் தெரிவித்தனர்.

இதுபோல், தங்கள் உரிமைக்காகப் போராடும் விவசாயிகளுக்கு உள்ளூர்வாசிகள் உதவத் துவங்கியதால் விவசாயிகள் இடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், அவர்களது அடிப்படை வசதிகளுக்காக உருவான பிரச்சனையும் முடிவிற்கு வந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து பாட்டியாலாவை சேர்ந்த பல்வீந்தர்சிங் கூறும்போது, ‘‘குடியரசு தினத்திற்கு பின், உள்ளூர்வாசிகள் எனும் பெயரில் எங்களை எதிர்த்து போராடியவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் எனத் தெரிந்து விட்டது.

எங்களது போராட்டக்களங்களை தனிமைப்படுத்தும் வகையில் இணையதள வசதிகளை அரசு துண்டித்துள்ளது. இதனால் எங்களுக்கு உதவும் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே பெரும் குறையாக உள்ளது.’’ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டப் பகுதிகளான சிங்கு, டிக்ரி மற்றும் காஜிபூரில் அரசு துண்டித்த இணையதள வசதிகள் ஜனவரி 31 வரை என்றிருந்தது, பிறகு இவை மேலும் சில நாட்களுக்காக நீட்டிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x