சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு: நித்தியானந்த ராய் திட்டவட்டம்
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று மத்திய இணையமைச்சர் நித்தியானந்த ராய் புதன்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 29-ம் தொடங்கி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 4வது நாளாக நடைபெறும் இன்றைய கூட்டடத்தில் மாநிலங்களவையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சிவசேனா எம்.பி.அனில் தேசாய் எழுப்பிய ஒரு கேள்வியில், ''நமது நாட்டுக்குள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரிய அளவில் நுழைந்துள்ளது குறித்து மத்திய அரசு அறிந்திருக்கிறதா, எல்லையில் உள்ள பாதுகாப்புப் படையினர் ஏன் இத்தகைய குடியேறுபவர்களின் நுழைவைத் தடுக்க முடியவில்லை, நாட்டில் அவர்களை எல்லாம் அரசாங்கம் எவ்வளவு காலம் தாங்கிக்கொண்டிருக்கப் போகிறது?'' போன்ற விவரங்களை கேட்டார்.
சிவசேனா எம்.பியின் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். இதுகுறித்து தனது எழுத்துபூர்வமான பதிலில் கூறியதாவது:
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரை தடுத்து நாடுகடத்துவதற்காக 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின் 3 (2) (இ) மற்றும் 3 (2) (சி) பிரிவுகளின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தும் அதிகாரம் மத்தியஅரசுக்கு உள்ளது. பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு நபரையும் இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம். இது தேசிய குடியுரிமை பதிவேடு சரிபார்ப்பு செயல்முறையின் பின்னர் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும்.
மேலும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 239 (1) இன் கீழ், அனைத்து யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களும் 1958 முதல் மேற்கண்ட அதிகாரங்கள் தொடர்பான மத்திய அரசின் செயல்பாடுகளை நிறைவேற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நித்தியானந்த ராய் தெரிவித்தார்.
