பிரதமர் நரேந்திர மோடி ஆணவத்தை கைவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது: பிஹார் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கருத்து

பிரதமர் நரேந்திர மோடி ஆணவத்தை கைவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது: பிஹார் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி கருத்து
Updated on
1 min read

பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி தனது ஆணவத்தைக் கைவிட வேண்டிய நேரம் இது. இல்லாவிட்டால் மக்கள் அவரைத் தூக்கி எறிந்து விடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: பிஹாரில் மகா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது பிரிவினைவாதத்துக்கு எதிரான ஒற்றுமையின் வெற்றி; அராஜகத்துக்கு எதிரான மனிதநேயத்தின் வெற்றி, வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி.

உண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான வெற்றி மட்டும் அல்ல. பாஜக, ஆர்எஸ்எஸ், மோடி ஆகியோரின் சித்தாந்தங்களுக்கு எதிரான வெற்றி. வாக்குகளுக்காக இந்துக் களையும் முஸ்லிம்களையும் மோதவிடுவதற்கு எதிரான செய்தி இது.

மோடியின் (நிர்வாக) வாகனம் இன்னும் புறப்படவில்லை. அவர் வாகனத்தை இயக்கி, விசையை முடுக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யவில்லை என்றால், பிஹாரில் செய்ததைப் போலவே மக்கள் வாகனத்தின் கார் கதவைத் திறந்து உங்களை வெளியே தூக்கி எறிவர். ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்தைத் தூண்டுவதை ஒரு பிரதமர் என்ற வகையில் அவ்வளவு உயரிய பதவியில் இருந்துகொண்டு செய்யக்கூடாது.

பிரதமர் மோடி தனது ஆணவ தொனியை குறைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கும், நாட்டுக்கும் நல்லது.

பிரச்சாரம் மட்டுமே செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, செயலில் அவர் இறங்க வேண்டும். அடிக்கடி வெளிநாடுகள் பயணிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். அதற்குப் பதிலாக விவசாயிகள், தொழி லாளர்களை சந்தித்து அவர் களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள்.

இதே கருத்துதான் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. மோடி கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in