

பிரபல நிழலுலக தாதா சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளி சையத் நியாமத், தனிப்படை போலீஸாரால் பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் வலதுகரமாக இருப்பவர் சோட்டா ஷகீல். இவர் தற்போது சிபிஐ அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருக் கும் சோட்டா ராஜனுக்கு நெருக்க மாக இருந்துள்ளார். சர்வதேச போலீஸாரால் தேடப்படும் சோட்டா ஷகீலின் கூட்டாளிகள் பெங்களூரு, மங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் உலவுவ தாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளி சையத் நியாமத் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறை அதிகாரி சந்திரசேகர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளி சையத் நியாமத் (எ) ரஹ்மான் (28) பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக திலக் நகர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கப்பட்டது. சையத் நியாமத்துக்கு நெருக்க மானவர்களை கண்காணித்ததில், அவர் பிஸ்மில்லா நகர் 3-வது தெருவில் உள்ள வீட்டில் பதுங்கி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்து, சையத் நியாமத்தை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் கர்நாடகாவில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர் களை கொலை செய்து, அதன் மூலம் மதக் கலவரம் ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டது தெரிய வந்தது.
இந்த சோதனையில் சையத் நியாமத் மட்டுமில்லாமல் அவரது கூட்டாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 3 பேரையும் தனித்தனியாக, ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சையத் நியாமத் மீது பெங்க ளூரு திலக் நகர் காவல் நிலை யத்தில் ஒரு கொலை வழக்கு நிலு வையில் உள்ளது. இது தவிர கொள்ளை, கடத்தல், மிரட்டல், கொலைமுயற்சி என 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.