

நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை நடப்பு ஆண்டில் மேற்கொள்ளாமல் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மத்திய பட்ஜெட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக ரூ.3,728 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சில மாநிலங்களில் என்பிஆர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்தப் பணி நிறுத்தப்பட்டது. இந்தப் பணி இரு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது.
முதல் கட்டம் 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகளில் கணக்கெடுப்பு, மற்றும் பட்டியலிடுதலும், 2021 பிப்ரவரி 9 முதல் 28-ம் தேதி வரை மக்கள்தொகை கணக்கீடும் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தி இந்து (ஆங்கிலம்) சார்பில் ஆர்டிஐ மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதற்குப் பதிவாளர் இயக்குநர் அளித்த பதிலில், “என்பிஆர் பதிவேட்டிற்கான கேள்விகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடங்குவது குறித்த தேதியும் முடிவாகவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டிடம் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் நடந்து வருவதால், இந்த ஆண்டு நடக்க வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு தொடங்கவே வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தனர்.