தமிழகத்தில் அரசு வேலையில் 69% இட ஒதுக்கீட்டுக்குத் தடை கோரி மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கும் முறைக்கு எதிராக உடனடியாகத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

சி.பி.காயத்ரி எனும் மாணவி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்குக் கல்வி , அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் எனச் சட்டம் இயற்றப்பட்டு, இது அரசியலமைப்புச் சட்டத்தன் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்துவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என இட ஒதுக்கீடு முறை வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவி காயத்ரி தனது வழக்கறிஞர் ஜி.சிவபாலமுருகன் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டைக் கல்வி, அரசுப் பணிகளிலும் வழங்குவது தன்னிச்சையானது, அர்த்தமில்லாதது, அளவுக்கு மீறியது. கூடுதலாக இட ஒதுக்கீடு அளவு என்பது பொதுப்பிரிவில் உள்ள மாணவர்கள், அரசுப் பணிக்குச் செல்வோரைப் பாதிக்கும்.

உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்திரா ஷானே வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக தமிழக அரசின் சட்டம் இருக்கிறது. அந்தத் தீர்ப்பில் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட விதிவிலக்குகள், அசாதாரணச் சூழல், மக்கள் நீரோட்டதுக்கு வராத சமூகத்தினர் ஆகியோருக்கு மட்டுமே இந்தத் தளர்வுகளை அளிக்கப் பரிசீலிக்கலாம்.

தமிழக அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீடு சட்டம் 1993, இந்திரா ஷானே வழக்கில் அளித்த தீர்ப்பின்படி இல்லை என்பதால், அதை அரசியலமைப்புச் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்.

9-வது அட்டவனையில் இருக்கும் ஒவ்வொரு சட்டமும் அடிப்படைக் கோட்பாட்டின் கட்டமைப்பைச் சிதைத்கிறது. அடிப்படைக் கட்டமைப்பில் அனைவரும் சமம் எனும் கொள்கை மீறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் எஸ்இபிசி சட்டம் 2018, 65 சதவீதத்துக்கும் அதிகமாக இட ஒதுக்கீடு செல்லும்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோ அதேபோன்று தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

மருத்துவம், பொறியியல் உள்ள தொழிற்சார்ந்த படிப்புகளும் தங்கள் இடங்களை அதிகரித்துக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெறவது அவசியம்.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெறாமல் இடங்களை அதிகரிக்கக் கூடாது. இடங்களை அதிகப்படுத்தும் முறை நடைமுறையில் அமல்படுத்தாததால், பொதுப் பிரிவினர் பாதிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட அமர்வு, 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in