Last Updated : 02 Feb, 2021 02:27 PM

 

Published : 02 Feb 2021 02:27 PM
Last Updated : 02 Feb 2021 02:27 PM

பிரதமர் மோடியின் அறிமுகம்: 2020-ம் ஆண்டுக்கான ஆக்ஸ்ஃபோர்டு இந்தி வார்த்தையாக ‘ஆத்மநிர்பார் பாரத்’ தேர்வு

பிரதமர் மோடி: கோப்புப் படம்.

புதுடெல்லி

2020-ம் ஆண்டுக்கான ஆக்ஸ்ஃபோர்டு இந்தி வார்த்தையாக பிரதமர் மோடி அறிமுகம் செய்த (தற்சார்பு இந்தியா) ஆத்மநிர்பார் பாரத் வார்த்தை இடம் பெற்றுள்ளது.

ஆத்மநிர்பார் பாரத் எனும் இந்தி வார்த்தையை 2020-ம் ஆண்டுக்கான ஆக்ஸ்ஃபோர்டு இந்தி வார்த்தையாக மொழி வல்லுநர்கள் கீர்த்திகா அகர்வால், பூனம் நிகம் சாஹே, மோகன் பாக்வெல் ஆகியோர் கொண்ட குழுவினர் தேர்வு செய்தனர்.

சென்ற 2020-ம் ஆண்டின் மனநிலை, சமூகப் பிணைப்பு, கலாச்சார முக்கியத்துவம் ஆகியவற்றின் வெளிப்பாடாக இந்த ஆத்மநிர்பார் பாரத் வார்த்தை அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸின் மொழிப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸ் காலத்தில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தபோது, பிரதமர் மோடி ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) எனும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

உள்நாட்டுத் தொழில்களுக்கும், உள்நாட்டுப் பொருட்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்த ஆத்மநிர்பார் பாரத் எனும் வார்த்தை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது,

இந்தியாவில் பலரும் அந்த வார்த்தையைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், 2020-ம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக ஆத்மநிர்பார் பாரத் தேர்வு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆத்மநிர்பார் பாரத் பிரச்சாரத்தின் வெளிப்பாடாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. குடியரசு தின அணிவகுப்பிலும் கரோனா தடுப்பூசி தொடர்பான அலங்கார பொம்மை அணிவகுப்பு இடம் பெற்று ஆத்மநிர்பார் பாரத் பிரச்சாரம் பிரபலமடைந்தது.

இதுகுறித்து ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸின் இந்திய மேலாண் இயக்குநர் சிவராமகிருஷ்ணன் வெங்கடேஸ்வரன் கூறுகையில், “யாரும் எதிர்பார்த்திராத ஆண்டாக 2020 அமைந்தது. ஆனால், பிரதமர் மோடி அறிமுகம் செய்த ஆத்மநிர்பார் பாரத் எனும் வார்த்தை உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களால் பரவலாக உச்சரிக்கப்பட்டது. கரோனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வார்த்தையாக மாறியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதற்குமுன், ஆதார் (2017), நாரி சக்தி (2018), சம்விதான் (2019) ஆகிய இந்தி வார்த்தைகள் ஆக்ஸ்ஃபோர்டு மொழியில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x