

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஜசி பங்குகள் விற்பனை, இரு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புக்கு வங்கி அதிகாரிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், “2021-22ஆம் நிதியாண்டில் ஐடிஐபி வங்கி தவிர்த்து இரு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும். எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளும் சந்தையில் விற்பனை செய்யப்படும். இதற்கான சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதம் வரை இருந்த நிலையில், அதை 74 சதவீதமாகவும் உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட்டில் இரு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வங்கி அதிகாரிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி), அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் அமைப்பு (ஏஐபிஓஏ), இந்திய தேசியவங்கி அதிகாரிகள் காங்கிரஸ் (ஐஎன்பிஓசி), வங்கி அதிகாரிகளுக்கான தேசிய அமைப்பு (என்ஓபிஓ) ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த 4 அமைப்புகளும் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், “பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யத் தயாராவது என்பது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கையிலெடுக்க வாய்ப்பு வழங்குவதாகும்.
வங்கி தேசியவுடைமைச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், காப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்யும் முடிவு செய்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். காப்பீட்டுத் துறையில் 49 சதவீதத்திலுருந்து 79 சதவீதமாக அந்நிய முதலீடு உயர்த்தப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
.
பேங்க் நிர்பார் பாரத் திட்டத்தில் மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் பொதுத்துறை வங்கிகள்தான் நடைமுறைப்படுத்துகின்றன. இரு அரசு வங்கிகளைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு உகந்தது அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக அரசு வங்கிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்துள்ளன.
அடிப்படைக் கட்டமைப்பு, சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரை உயர்த்துதல், மகளிர் மேம்பாடு, விவசாயிகள் நலன், சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி, மண்டலங்களுக்கு இடையே பாலமாக இருத்தலில் அரசு வங்கிகளின் பங்கு சிறப்பானது.
ஆதலால், வங்கிகளைத் தனியார் மயமாக்குதல், எல்ஐசி பங்குகளை விற்பனை செய்தல் போன்றவற்றைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று தெரிவித்துள்ளன.