மத்திய பட்ஜெட்டில் நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல்: தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தங்கம் விலை ஏறி, நடுத்தரக் குடும்பத்தினருக்குக் கவலையை ஏற்படுத்தி வந்த நிலையில், ஆறுதல் அளிக்கும் செய்தி மத்திய பட்ஜெட்டில் வந்துள்ளது.

தங்கம், வெள்ளி ஆகிய விலை உயர்ந்த உலோகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கம், வெள்ளி நகைகளின் விலை குறையக்கூடும். இவற்றின் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

''தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் இறக்குமதி செய்யப்படும்போது, அடிப்படை சுங்கவரி 12.5 சதவீதம் விதிக்கப்படுகிறது. 2019ல் 10 சதவீதமாக இருந்தது. இந்த இறக்குமதி குறைக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படும்

இறக்குமதி வரி வரும் காலங்களில் குறைக்கப்படும். இதன் மூலம் தங்கக் கட்டிகளுக்கான வரி 11.85 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்படும். வெள்ளிக் கட்டிகளுக்கான வரி 11 சதவீதத்திலிருந்து 6.11 சதவீதமாகக் குறைக்கப்படும். பிளாட்டினம் 12.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், தங்கக் காசுகளுக்கான இறக்குமதி வரி 12.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும் குறையும்.

அதுமட்டுமல்லாமல் தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகளுக்கு வேளாண் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு வரி 2.5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டதற்கு தங்கம்,வெள்ளி நகை தயாரிப்பாளர்கள் சார்பிலும் கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி கவுன்சில் சார்பிலும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்களில் தங்கம் இறக்குமதி 27.20 சதவீதம் குறைந்து 1680 கோடி டாலராகக் குறைந்தது. நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் இந்தியாவிலிருந்து தங்க நகைகள் ஏற்றுமதி 40 சதவீதம் குறைந்து 1700 கோடி டாலராகக் குறைந்துவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in