

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், அனைத்து மக்களுக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அவர் கூறியதாவது:
''காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், மக்களுக்குக் காப்பீடு வசதி எளிதாகக் கிடைக்கும் வகையிலும், அந்நிய முதலீட்டின் அளவை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்.
இந்தத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 50 சதவீத இயக்குநர்கள் சுயாட்சி இயக்குநர்களாக இருப்பார்கள், இயக்குநர்கள் குழுவில், முக்கிய மேலாண்மை நிர்வாகத்தில் இருப்போரும் இந்தியாவில் வசிப்போராக இருப்பார்கள். குறிப்பிட்ட அளவிலான லாபம் உள்நாட்டிலேயே தங்கும்.
இதற்காக காப்பீடு சட்டம் 1938-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு அந்நிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம் காப்பீடு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலாளிகள் உருவாகவும், கட்டுக்கோப்புடன் பாதுகாக்கவும் முடியும். கடந்த 2015-ல் காப்பீடு நிறுவனத்தில் அந்நிய முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
தற்போது ஆயுள் காப்பீடு என்பது நாட்டில் 3.6 சதவீதம் மட்டுமே ஜிடிபியில் இருக்கிறது. இது நாட்டின் சராசரியான 7.13 சதவீதத்தை விடக் குறைவாகும். உலகின் சராசரியான 2.98 சதவீதத்தை விட மிகக்குறைவாக 0.94 சதவீதம் மட்டுமே இருக்கிறது.
வங்கியின் மறு முதலீட்டுக்கு 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நடப்பு நிதியாண்டிலும் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த நிதியாண்டிலும் அதே தொகை ஒதுக்கப்படும்.
ஆனால், 2019-20ஆம் ஆண்டில் வங்கிகளின் மறு முதலீட்டுக்காக ரூ.70 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியது. இது 2017-18ஆம் ஆண்டில் ரூ.90 ஆயிரம் கோடியாகவும், 2018-19ஆம் ஆண்டில் ரூ.1.06 லட்சம் கோடியாகவும் இருந்தது''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.