

பாகிஸ்தான் எண்ணில் இருந்து பிரதமர் மோடி, பாஜக தலைவர்களைக் குறிவைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
உ.பி.யின் எட்டாவா சதர் தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சரிதா படவுரியாவுக்கு வாட்ஸ் அப் மூலம் இம்மிரட்டல் செய்திகள் வந்துள்ளன. பாகிஸ்தான் எண்ணிலிருந்து நாட்டின் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரிதா படவுரியா 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் குல்தீப் குப்தாவை 17,342 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 1999-ல் கணவர் அபயவீர் சிங் படவுரியா கொலை செய்யப்பட்ட பின்னர் சரிதா அரசியலுக்கு வந்தார்.
மிரட்டல் செய்தி குறித்து எட்டாவா சதர் பகுதியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் கூறியதாவது:
''பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அடையாளத்துடன் வாட்ஸ் அப்பில் சில மிரட்டல் செய்திகள் வந்துள்ளதாக எட்டாவா சதரைச் சேர்ந்த எம்எல்ஏ போலீஸாரிடம் தெரிவித்தார்.
எட்டாவா சதர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரிதா படவுரியாவுக்கு வந்துள்ள செய்திகளை நான் பார்த்தேன். இது பாகிஸ்தானின் மொபைல் எண்ணிலிருந்து +92 தொடங்கி வந்துள்ளது.
அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப் வழியாக சனிக்கிழமை இரவு 11 மணியளவில் முதல் செய்தி வந்தது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரதமர், மூத்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் கொலை செய்யப்போவதாக எட்டு மிரட்டல் செய்திகள் வந்தன.
நாங்கள் இப்பிரச்சினையை ஆராய்ந்து வருகிறோம். சட்டப்பேரவை உறுப்பினருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்".
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மிரள மாட்டேன்: எம்எல்ஏ கருத்து
இதுபோன்ற செல்போன் செய்திகளுக்கெல்லாம் மிரளமாட்டேன் என எம்எல்ஏ சரிதா படவுரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவேன். இதுபோன்ற எந்தச் செய்தியையும் கண்டு மிரளமாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.