Last Updated : 01 Feb, 2021 12:11 PM

 

Published : 01 Feb 2021 12:11 PM
Last Updated : 01 Feb 2021 12:11 PM

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள்; ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; புதிதாக தற்சார்பு சுகாதாரத் திட்டம் அறிமுகம் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது இரு தடுப்பூசிகள் இருக்கும் நிலையில் மேலும், இரு தடுப்பூசிகள் வர உள்ளன. தற்சார்பு சுகாதாரத் திட்டத்துக்கு (ஆத்ம நிர்பார்) ரூ.64 ஆயிரத்து 180 கோடி ஒதுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாாராமன் அறிவித்தார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார்.

கரோனா வைரஸ் பரவல், தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சிக் குறைவு, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் அமைந்துள்ளது.

பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்துப் பேசினார். முதல் முறையாக இந்த ஆண்டு பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்படுகிறது. அனைத்து எம்.பி.க்களுக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, ஆன்லைன் மூலம் நகல்கள் வழங்கப்படும்.

நிர்மலா சீதாராமன் கடந்த 2 ஆண்டுகள் பின்பற்றியது போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி பகி கட்டா பையில் ஆவணங்களைக் கொண்டுவரவில்லை. அதற்கு மாறாக, சிறிய சிவப்பு பையில் டேப்ளட் கொண்டுவந்திருந்தார். கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அனைத்தையும் மஞ்சள் நிறத்தில் கொண்டுவந்திருந்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கு தான் அணிந்த புடவை, டேப்ளட் கொண்டுவந்த பை அனைத்தையும் சிவப்பு வண்ணத்துக்கு மாற்றினார்.

பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “ பட்ஜெட் தயாரிப்பு இதுவரை இல்லாத சூழலுக்கு மத்தியில், நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இருந்தபோது தயாரிக்கப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் ஆத்ம நிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் இரு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. பொருளாதாரத்தை மீட்சி பெறவைக்க ரிசர்வ் வங்கி ரூ.27.10 லட்சம் கோடிக்குச் சலுகைகளை அறிவித்தது.

இந்தியாவில் தற்போது கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் மேலும் 2 தடுப்பூசிகள் கொண்டுவரப்படும். நம் நாட்டு மக்களை மட்டும் காப்பாற்றாமல், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் மக்களைக் காக்க அது பயன்படும்.

இந்தியாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உலகிலேயே மிகக்குறைவாகும். லட்சத்துக்கு 112 பேர்தான் உயிரிழந்துள்ளனர். 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட், சுகாதாரம், உடல்நலம், நிதி முதலீடு, கட்டுமானம், முழுமையான வளர்ச்சி, புத்தாக்கம், மனிதவளத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது

கரோனா வைரஸ் தடுப்பூசிக்காக 2021-22ம் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக தற்சார்பு சுகாதாரத் திட்டம் கொண்டுவரப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.64,180 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

முதலீட்டுச் செலவு அடுத்த நிதியாண்டில் 35 சதவீதம் அதிகமாக ரூ.5.54 லட்சமாக அதிகரிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x