Published : 01 Feb 2021 10:16 AM
Last Updated : 01 Feb 2021 10:16 AM

11 புயல்களில் 6,000 மீன்பிடி படகுகள், 40,000 மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை

புதுடெல்லி

கடந்த ஆண்டில் ஏற்பட்ட 11 புயல்களின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6,000 மீன்பிடி படகுகள், 40,000 மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்திய கடலோர காவல் படை தனது 45வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடுகிறது. கடந்த 1978ம் ஆண்டு 7 தளங்களுடன் தொடங்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை, இன்று 156 கப்பல்கள் மற்றும் 62 விமானங்களுடன் ஒரு வலுவான படையாக வளர்ந்துள்ளது.

2025ம் ஆண்டுக்குள் 200 தளங்கள் மற்றும் 80 விமானங்களை பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலகின் நான்காவது பெரிய கடலோர காவல் படையான, இந்திய கடலோர காவல் படை, இந்திய கடலோர பகுதிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், இந்திய கடல்சார் மண்டலத்தில் விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. ‘நாங்கள் பாதுகாக்கிறோம்’ என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படை, தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 14,000 குற்றவாளிகளை இப்படை கைது செய்துள்ளது. சராசரியாக, இரண்டு நாளைக்கு ஒருவரை கடலோரை காவல் படை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது.

கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், கடலோர காவல் படை 24 மணி நேர தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் 50 கப்பல்கள் மற்றும் 12 விமானங்கள் தினந்தோறும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடவடிக்கையால் 1,500 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில், அத்துமீறி நுழைந்த 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகளுடன் 80 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட 11 புயல்களின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6,000 மீன்பிடி படகுகள், 40,000 மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் உயிரிழப்பு, பொருள் இழப்பு தவிர்க்கப்பட்டது.

மண்டலத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற பிரதமரின் ‘சாகர்’ தொலைநோக்குக்கு திட்டத்திற்கு ஏற்ப, இந்திய கடலோர காவல் படை, இலங்கை அருகே ‘நியூ டைமண்ட்’ என்ற மிகப் பெரிய எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்தது. அதில் 3 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருந்தது. இதன் மூலம் பெரும் சுற்றுச் சூழல் ஆபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், மொரீசியஸ் அருகே வர்த்தக கப்பல் ‘வகாசியோ’ தரைதட்டியபோது, ஏற்பட்ட மாசுவை அகற்றவும் உதவியது.

இந்திய கடலோர காவல் படை தனது 44 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்ததை முன்னிட்டு, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x