Published : 01 Feb 2021 08:40 AM
Last Updated : 01 Feb 2021 08:40 AM

கரோனா பெருந்தொற்று; உலக சுகாதார நிறுவனம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த முதல் நாடு இந்தியா: ஹர்ஷ்வர்தன் பெருமிதம்

புதுடெல்லி

கரோனாவை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த முதல் நாடு இந்தியா என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவழி மருத்துவர்களின் கருத்தரங்கில், டாக்டர் ஹர்ஷ்வர்தன், காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். ‘‘இந்தியாவில் கோவிட் - ஒரு வெற்றி கதை’’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:

கோவிட்-19 தொற்று கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்டு உலகம் முழுவதும் பரவியது. அரசு மற்றும் மக்கள் ஒத்துழைப்போடு, மற்ற நாடுகளைவிட, நாங்கள் சிறப்பாக கோவிட்-19 தொற்றுக்கு எதிராக செயல்பட்டோம். கரோனாவை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த முதல் நாடு இந்தியா. இதற்கான திட்டம் கடந்தாண்டு ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கியது. வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் ஜனவரி 17 ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டன. அன்றைய தினமே தீவிர கண்காணிப்பு நடவடிக்கை தொடங்கியது. தொற்றுகளைக் கண்டறியும் பணி, உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை தனிமைபடுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மார்ச் 22ம் தேதி, பொது ஊரடங்குக்கு, பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மக்களின் ஒட்டு மொத்த அணுகுமுறைதான், குணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருப்பதற்கு காரணமாக இருந்தது.

கோவிட் தடுப்பூசி உருவாக்கி அதனைப் பரிசோதனை செய்வதில், இந்திய விஞ்ஞானிகள் அயராது உழைத்தனர்.தடுப்பூசி நடவடிக்கைக்கு உதவ கோ-வின் என்ற தனிச்சிறப்பான டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டது. இது தடுப்பூசி சரியான நேரத்தில், சரியான நபருக்கு வழங்கப்படுகிறதா என்ற அண்மைத் தகவல்களை உறுதி செய்கிறது.

இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x